'கீழடி அகழாய்வு ஒரு வரலாற்றுப் பார்வை' என்னும் தலைப்பில் ஓய்வுபெற்ற தலைமையாசிரியர் பாலசுப்பிரமணியன் எழுதிய நூல் வெளியீட்டு விழா மதுரையில் இன்று நடைபெற்றது. இவ்விழாவில் பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு நூலை வெளியிட்டார்.
அதனைப் பெற்றுக்கொண்டு வாழ்த்துரை வழங்கிய தொல்லியல் அறிஞர் வேதாசலம் கூறுகையில், "1973ஆம் ஆண்டு கீழடி அகழாய்வு களத்தை முதன்முதலில் எனக்கு அறிமுகப்படுத்தியவர் ஆசிரியர் பாலசுப்பிரமணியம். அந்தவகையில் கீழடி அகழாய்வு குளத்தை முதன்முதலாகப் பார்வையிட்ட தொல்லியல் அலுவலர் நான் என்பதில் எனக்குப் பெருமையாக உள்ளது.
லண்டன், பர்மா, சிங்கப்பூர், மலேசியா உள்ளிட்ட நாடுகளுக்கு நான் பயணம்செய்த போதெல்லாம் கீழடி குறித்துதான் எல்லோரும் என்னிடம் கேட்கிறார்கள். அந்தளவிற்கு கீழடி மிகப்பெரும் தாக்கத்தை உலகத் தமிழர்களிடம் ஏற்படுத்தியிருக்கிறது" என்றார்.
ஏற்புரை வழங்கிய ஆசிரியர் பாலசுப்பிரமணியம் பேசுகையில், "கேரள மாநிலம் பண்டைய முசிறி என்று அறியப்பட்டுள்ள பட்டணம் பகுதியில் கடந்த ஒன்பது ஆண்டுகளாக நடைபெற்றுவருகின்ற அகழாய்வு அரசின் துணையின்றி தன்னார்வலர்கள், அறிஞர்கள் ஆகியோரின் தனிப்பட்ட ஆர்வம் காரணமாக நடைபெறுகிறது.
அதுபோல் உலகத்தில் வாழ்கின்ற அனைத்து தமிழர்களும் கீழடியை மையமாகக் கொண்டு நிதி ஆதாரம் உருவாக்கி ஆய்வுகளைத் தொடர்ந்து மேற்கொள்ள முன்வர வேண்டும்.
அரசுகள் செய்தாலும் செய்யாவிட்டாலும் தமிழர்கள் இதனைச் செய்ய வேண்டும் இந்த வேண்டுகோளைதான் நான் பல்வேறு இடங்களில் பேசும்போது முன்வைத்துவருகிறேன். கீழடியில் குறைந்தபட்சம் 20 ஆண்டுகளுக்கு ஆய்வுசெய்ய வேண்டிய தேவை உள்ளது" என்றார்.
இந்நிகழ்ச்சியில், கீழடி அகழாய்வில் நேரடியாகவும் மறைமுகமாகவும் பங்களித்த அனைவருக்கும் பாராட்டு செய்யப்பட்டது.
இதையும் படிங்க: