மதுரை காமராஜர் பல்கலைக்கழக சான்றிதழ் பிரிவில் பணியாற்றும் ஊழியர் ஒருவர், சில நாள்களாகக் காய்ச்சலால் அவதிப்பட்டு வந்தார். இதையடுத்து அவர் மேற்கொண்ட பரிசோதனையில் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. தற்போது அவருக்கு அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதனிடையே, அவரோடு அதே அலுவலகத்தில் பணியாற்றிய மற்ற ஊழியர்கள் தங்களைத் தனிமைப்படுத்திக் கொள்ள பல்கலைக்கழக நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக துணைவேந்தர் கிருஷ்ணன் கூறியபோது, ” கரோனா உறுதி செய்யப்பட்ட ஊழியர் பல்கலைக்கழகத்தின் அனைத்து அலுவலகங்களுக்கும் பணி நிமித்தம் சென்று வந்தார். ஆகையால் பல்கலைக்கழகம் முழுவதும் கிருமிநாசினி தெளிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது ” என்றார்.
தூய்மைப்படுத்தும் பணிகளுக்காக நேற்று முதல் பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள அனைத்து அலுவலகங்களும் மூடப்பட்டுள்ளன. சான்றிதழ் பிரிவில் பணியாற்றிய ஊழியர்கள் அவரவர் வீடுகளில் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: குறைந்துவரும் கரோனா : சிறப்பு சிகிச்சை மையம் மூடல்