மதுரை தெப்பக்குளம் பகுதியில் மதுரை மத்திய சிறையின் கிளைச் சிறையான அரசினர் கூர்நோக்குப் பள்ளி செயல்பட்டுவருகிறது. இந்தப் பள்ளியில் ஏறத்தாழ 20-க்கும் மேற்பட்ட சிறுவர்கள் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
ஞாயிற்றுக்கிழமைகளில் அங்கு சிறார்களுக்குத் திரைப்படம் காண்பிக்கப்படுவது வழக்கமாகும். இந்நிலையில், நேற்று புதிய திரைப்படங்கள் திரையிடவில்லை எனக் கூறி அங்குள்ள அலுவலர்களுடன் சிறுவர்கள் தகராறில் ஈடுபட்டுள்ளதாக அறியமுடிகிறது.
இதனையடுத்து, ஆத்திரத்தில் அங்கிருந்த இருக்கைகள், டியூப்லைட் உள்ளிட்ட பொருள்களைச் சிறுவர்கள் அடித்து நொறுக்கி சேதங்களை ஏற்படுத்தியும் உள்ளனர். மேலும், டியூப்லைட்களின் உடைந்த கண்ணாடித் துகள்களைப் பயன்படுத்தி தன்னிச்சையாகக் காயங்களை ஏற்படுத்திக் கொண்டுள்ளதாகக் காவல் துறை தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
![Madurai juvannaile school boys quarrel](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-mdu-02-juvannaile-boys-quarrel-script-9025391_09032020124351_0903f_1583738031_600.jpg)
சம்பவம் நடைபெற்ற நள்ளிரவிலேயே, காயமடைந்த ஆறு சிறுவர்களையும் காவல் துறையினரின் பலத்த பாதுகாப்புடன் மதுரை அரசு இராசாசி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற கூர்நோக்குப் பள்ளி நிர்வாகம், சிறுவர்களுக்கு சிகிச்சையளித்து மீண்டும் அதிகாலை கூர்நோக்குப் பள்ளிக்கு அழைத்துவரப்பட்டனர்.
புதிய திரைப்படத்தைத் திரையிடப்படவில்லை என்பதற்காக ரகளையில் ஈடுபட்டு பொருள்களைச் சேதப்படுத்தி கூர்நோக்குப் பள்ளி சிறுவர்கள் காயங்களை ஏற்படுத்திக்கொண்ட இந்தச் சம்பவம் தொடர்பாக மதுரை மத்திய சிறையின் கண்காணிப்பாளர் ஊர்மிளா விசாரணை நடத்திவருகிறார்.
இதையும் படிங்க : சென்னையில் நாட்டு வெடிகுண்டு வீசிய வழக்கு - 8 பேர் சேலம் மத்திய சிறைக்கு மாற்றம்!