தூத்துக்குடியைச் சேர்ந்த பாத்திமா என்பவர் வேதாந்தா குழுமத்திற்கு எதிராக உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் மனு ஒன்றினை தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில்,
"தூத்துக்குடியில் வேதாந்தா குழுமம் சார்பாக ஸ்டெர்லைட் ஆலை நிறுவனம் செயல்பட்டு வந்தது. இந்த நிறுவனம், பல்வேறு சுற்றுச்சூழல் சட்டங்களின் விதிமுறைகளை மீறி செயல்பட்டுள்ளது.
குறிப்பாக, நீர் மாசுபடுதல் தடுப்பு சட்ட பிரிவு 1974, காற்று மாசுபடுத்தல் தடுப்பு சட்டப்பிரிவு 1981, சுற்றுச்சூழல் மாசு தடுப்பு சட்டப்பிரிவு 1986 ஆகிய பிரிவுகளின் விதிமுறைகள் முற்றிலும் மீறப்பட்டுள்ளது. வேதாந்தா குழுமம் இந்த விதிமுறைகளை மீறி செயல்பட்டதாக முந்தைய வழக்குகளில் அரசு தரப்பு ஒத்துக் கொண்டுள்ளது. சட்ட விதிமுறைகளை மீறி செயல்பட்ட வேதாந்தா நிறுவன ஸ்டெர்லைட் ஆலை மீது குற்றவியல் நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும்.
ஆனால் இதுவரையில் மத்திய, மாநில அரசுகள் குற்றவியல் நடவடிக்கை எடுக்கவில்லை. தமிழக மாசு கட்டுபாட்டு வாரியம் சட்ட விதிமுறைகளை மீறி செயல்பட்ட வேதாந்தா நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்க நீதிமன்றம் உத்தரவிட வேண்டும்" எனக் கூறப்பட்டிருந்தது.
இந்நிலையில் இந்த மனு நீதிபதிகள் கிருபாகரன் மற்றும் சுந்தர் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது. இதில், வேதாந்தா நிறுவனத்தை தானாக முன் வந்து எதிர் மனுதாரராக சேர்த்த நீதிபதிகள் வழக்கு விசாரணையை திங்கள் கிழமைக்கு (ஏப்ரல் 15) ஒத்திவைத்தனர்.