சிவகங்கை மாவட்டம் தஞ்சாகூரைச் சேர்ந்த அறிவழகன் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு ஒன்றினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், சிவங்கை மாவட்டத்தில் அமைந்துள்ள தஞ்சாகூர் கிராமத்தில் உள்ள பெரும்பாலானோர் விவசாயத்தை முக்கியத்தொழிலாக கொண்டவர்கள்.
எங்கள் கிராமத்தைச் சுற்றிலும் ஆறு ஊரணிகள் உள்ளது. இந்த ஊரணிகளுக்கு வைகை நதியில் இருந்து மார்நாடு கண்மாய் வாய்க்கால் வழியாக நீர் வரும். இதனால், கிராமத்தில் விவசாயம் செழிப்பாக இருந்தது. இந்நிலையில், முறையாக வாய்க்கால்களை அரசு பராமரிக்காததால் தற்போது வைகை அணையில் இருந்து விவசாயத்திற்கு இரண்டு முறை தண்ணீர் திறக்கப்பட்டும் ஊரணிகளுக்கு நீர் வந்து சேரவில்லை.
மேலும், எங்கள் பகுதியில் அதிகப்படியான சீமைக்கருவேல மரங்கள் வளர்ந்துள்ளது. எனவே, சீமைக்கருவேல மரங்களை அகற்றவும் ஊரணிகளுக்கு வரும் வாய்க்கால்களை உடனடியாக தூர்வார அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று தெரிவித்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் கண்மாய்களை தூர்வார உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில், இந்த வழக்கு நீதிபதி எஸ்.எஸ். சுந்தர் முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது, இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அரசுத் தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. சிவகங்கை மாவட்ட ஆட்சியர் நீதிமன்ற உத்தரவை சிறப்பாக நடைமுறைப் படுத்தியுள்ளார்.
இதனால் சிவகங்கை மாவட்டத்தில் 90 விழுக்காடு நீர்நிலைகளில் தண்ணீர் தேக்கிவைக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்த நீதிபதி எஸ்.எஸ். சுந்தர், மாவட்டத்தில் கண்மாய் தூர்வாரப்பட்டு சீமைக்கருவேல மரங்கள் அகற்றப்பட்டுள்ளது என்றும் எதிர்கால நோக்கோடு நீர்நிலைகளை தூர்வார புதிதாக ஜேசிபி இயந்திரங்களையும் மாவட்ட ஆட்சியர் வாங்கியுள்ளார். இது பாராட்டத்தக்கது என்றும் கூறி வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டார்.
இதையும் படிங்க: மதுரை வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்ட மாவட்ட ஆட்சியர்!