இலங்கையைச் சேர்ந்தவர்கள் சங்க சிரந்தா, முகமது சப்ராஸ். சட்டவிரோதமாக இந்தியாவில் தஞ்சமடைந்த இவர்கள், போலி ஆதார் அட்டையைத் தயாரித்ததாக ராமநாதபுரம் கேணிக்கரை காவல் துறையினர் கைது செய்து சென்னை புழல் சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில் தங்களை இலங்கைக்கு அனுப்பக்கோரி இருவரும் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் ஆட்கொணர்வு மனுக்களைத் தாக்கல் செய்தனர். ராமநாதபுரம் நீதிமன்றத்தில் அவர்கள் தாக்கல் செய்த ஒரு மனு விசாரணையில், கீழமை நீதிமன்றம் அவர்களைப் புழல் சிறையிலிருந்து விடுவித்தது.
இடைப்பட்ட நேரத்தில் விசாரணைக்கு வந்த ஆட்கொணர்வு மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள், ஆட்கொணர்வு மனு நிலுவையில் இருக்கும்போது அவர்கள் எவ்வாறு விடுவிக்கப்பட்டனர் எனக் கேள்வி எழுப்பினர். மேலும், அவர்கள் தற்போது எங்கு உள்ளார்கள் என அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டிருந்தனர்.
இந்நிலையில் இது தொடர்பாக இன்று நடந்த விசாரணையில் ராமநாதபுரம் காவல் துறை கண்காணிப்பாளர் நேரில் ஆஜராகி, வழக்கின் நிலை அறிக்கை தாக்கல் செய்தார். மேலும் இருவர் தப்பிக்க உதவியதாக எட்டு பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
இந்த வழக்கு விவகாரத்தில் கவனக்குறைவாகச் செயல்பட்ட காவல் துறை அலுவலர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கவும் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் தப்பியோடிய இருவரும் இலங்கை சென்றுவிட்டனரா என்பது குறித்து மத்திய வெளியுறவுத் துறை பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை நவம்பர் 5ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இதையும் படிக்கலாமே: ஓலைச்சுவடிகளை டிஜிட்டல் மயமாக்கும் வழக்கு - உயர் நீதிமன்றம் உத்தரவு