தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தை சேர்ந்த வணிகர்களான தந்தை மகன் ஜெயராஜ் - பென்னிக்கிஸ் இருவரும் 2020ஆம் ஆண்டு ஜூன் 19ஆம் தேதி காவல்துறை விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில் காவல் துறையினர் தாக்கி இருவரும் உயிரிழந்தனர்.
இது தொடர்பாக எழுந்த குற்றச்சாட்டின்கீழ் தொடரப்பட்ட வழக்கில், சாத்தான்குளம் காவல் நிலைய ஆய்வாளர் ஸ்ரீதர், சார்பு ஆய்வாளர்கள் பாலகிருஷ்ணன், ரகு கணேஷ், தலைமைக் காவலர் முருகன், காவலர்கள் முத்துராஜ், காவலர்கள் செல்லதுரை, வெயிலுமுத்து, தாமஸ் பிரான்சிஸ், சமயதுரை உள்ளிட்ட ஒன்பது பேர் மீது சிபிஐ தரப்பில் குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
இந்நிலையில் இந்த வழக்கு விசாரணையானது மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் நேற்று (ஆகஸ்ட்.11) விசாரணைக்கு வந்தபோது வழக்கில் கைது செய்யப்பட்ட ஒன்பது காவலர்களும் நேரில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
இதனையடுத்து இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி, வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை ஆகஸ்ட் 16ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
முன்னதாக இந்த வழக்கின் முக்கிய சாட்சியான ஜெயராஜின் மகளும், பென்னிக்சின் சகோதரியுமான பெர்சி நீதிபதி முன்பு சாட்சியம் அளித்தார். ஏற்கனவே கடந்த 4ஆம் தேதி ஜெயராஜின் மனைவி செல்வராணி சாட்சியம் அளித்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: கரோனா, போதை விழிப்புணர்வில் பள்ளி மாணவர்கள்