திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த ஆறுமுகசாமி என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்தார்.
அதில், "தேதிய பங்கு சந்தை மும்பையில் உள்ளது. வேலை நாள்களில் பங்குச் சந்தை வர்த்தகம் ஆன்லைன் மூலம் நடைபெறுகிறது. மும்பை பங்கு சந்தையில் இருந்து ஆன்லைனில் தகவல்களை எவ்வளவு விரைவாக பெறுகிறோமோ, அதனடிப்படையில் பங்கு வர்த்தகம் சிறப்பாக இருக்கும்.
இந்நிலையில் 'செபி'-யின் அனுமதி பெறாமல் மும்பையில் உள்ள தேசிய பங்குச் சந்தையில் சில குறிப்பிட்ட தரகர்கள் நேரடி இணைப்பு பெற்றுள்ளனர். இதனால் அந்த குறிப்பிட்ட தரகர்களுக்கு பங்கு வர்த்தகத்தின் தகவல்கள் உடனுக்குடன் கிடைத்து விடுகிறது. இதனால் அவர்கள் அதிக பலன் அடைகின்றனர். அதே நேரத்தில் இந்தியாவின் பிற பகுதிகளில் உள்ள பங்கு வர்த்தகர்களுக்கு தகவல்கள் சற்று தாமதமாக கிடைக்கிறது.
எனவே மும்பையில் உள்ள தேசிய பங்குச் சந்தையில் அனுமதி பெறாமல் நேரடி இணைப்பில் உள்ள தரகர்களின் இணைப்பை துண்டிக்க வேண்டும். அனைவருக்கும் ஒரே நேரத்தில் தகவல்கள் கிடைக்க உத்தரவிட வேண்டும்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மனு நீதிபதிகள் சிவஞானம், ஆனந்தி அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது இது குறித்து செபி, மும்பை தேசிய பங்குச் சந்தை உள்ளிட்டவை பதில் மனு தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை நான்கு வாரங்களுக்கு ஒத்தி வைத்தனர்.
இதையும் படிங்க: ’ஏசி காரில் செல்லும்போது கூட கூவம் நாற்றமடிக்கிறது’ - தலைமை நீதிபதி வேதனை!