சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில் வியாபாரிகள் நல சங்கத்தின் தலைவர் சுந்தரமூர்த்தி உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார். அதில், "மதுரை மாவட்டம், பேரையூர் அருகே சதுரகிரி மலையில் அமைந்துள்ள சுந்தர மகாலிங்க சுவாமி கோயில் மிகவும் பிரசித்திப் பெற்றது. இங்கு ஒவ்வொரு அமாவாசை, பெளர்ணமி மற்றும் விழாக்காலங்களில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
இங்கு ஆண்டு தோறும் நடைபெறும் ஆடி அமாவாசை திருவிழா பிரசித்திப் பெற்றது.
இந்நிலையில் சுந்தரமகாலிங்கம் கோயில் சார்பில் கட்டப்பட்ட கடைகள் ஏல அடிப்படையில் வாடகைக்கு விடப்படுகின்றன. இங்கு கோயிலுக்கு தேவையான மாலை உள்ளிட்ட பொருட்கள் விற்பனை செய்யப்படும். ஏல அறிவிப்பு ஜூன் மாதம் 10ஆம் தேதி வெளியிடப்பட்டது. இதில் வெளிப்படைத்தன்மை இல்லை. ஆகவே, இந்த ஏல அறிவிப்பை ரத்து செய்து உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தார்.
இந்த மனுவை இன்று விசாரித்த நீதிபதி அனிதா சுமந்த், "தற்போது ஆடி அமாவாசை திருவிழா நடைபெற உள்ளது. ஏற்கனவே ஏலம் எடுத்த 35 நபர்களே, ஆடி அமாவாசை திருவிழாவில் கடைகளை, (ஆகஸ்ட் 3ஆம் தேதி) நடத்தலாம். இதற்கு உரிய கட்டணத்தை 35 நபர்களும் கோயில் நிர்வாக அலுவலரிடம் செலுத்த வேண்டும். இது தற்காலிக ஏற்பாடு. அடுத்தாண்டு பொது ஏலம் நடைபெறும்" என்று உத்தரவிட்டார்.