மதுரை பெரியார் பேருந்து நிலையம் பாரதியார் ஷாப்பிங் காம்ப்ளக்ஸின் தலைவர் ராஜாராம் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனுவில், "மதுரை மாநகராட்சி ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பெரியார் பேருந்து நிலையம் நவீன பேருந்து நிலையமாக மாற்றப்பட்டு வருகிறது. அங்கு ஏற்கனவே கடை நடத்தி வந்தவர்களுக்கு மாற்றிடம் வழங்கக் கோரியதன் அடிப்படையில் மதுரை எல்லீஸ் நகர் பேருந்து நிலையம் முன்பாகத் தற்காலிகக் கடைகள் அமைக்கப்பட்டன.
இந்நிலையில், சென்னையைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் தொடர்ந்த வழக்கில் எல்லீஸ் நகர் பேருந்து நிலையம் முன்பாக தற்காலிகக் கடைகள் நடத்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இது ஏற்கத்தக்கதல்ல. ஆகவே எல்லீஸ் நகர் பேருந்து நிலையம் அருகே தற்காலிகக் கடைகள் நடத்த விதிக்கப்பட்ட தடையை நீக்கி உத்தரவிட வேண்டும்" எனக் குறிப்பிட்டிருந்தார்.
இந்த வழக்கு இன்று நீதிபதிகள் துரைசாமி, ரவிந்திரன் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மதுரை மாநகராட்சி சார்பில், பதில்மனு தாக்கல் செய்ய கால அவகாசம் கோரப்பட்டது. மதுரை மீனாட்சி அம்மன் கோயில் தரப்பில் தங்களையும் எதிர் மனுதாரராக சேர்க்க கோரிக்கை வைக்கப்பட்டது.
இதனை ஏற்ற நீதிபதிகள் மதுரை மீனாட்சி அம்மன் கோயில் தரப்பை எதிர் மனுதாரராகச் சேர்த்து உத்தரவிட்டு வழக்கு விசாரணையை மார்ச் 3ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.