மதுரை : மதுரையைச் சேர்ந்த ராஜேந்திரன், லதா, வைரமணி உள்ளிட்டோர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தனித்தனியாக மனுவினைத் தாக்கல் செய்திருந்தனர். அதில், ராஜேந்திரனின் மனுவில், நான் மம்சாபுரம் தொடக்க பால் உற்பத்தியாளர் சங்கத் தலைவராக உள்ளேன். மதுரை ஆவின் இயக்குனர் குழு தேர்தலில் எனக்கு வாக்களிக்கும் உரிமை உள்ளது. மதுரை ஆவினில் 17 இயக்குனர்களை தேர்வு செய்வதற்கான தேர்தல் அறிவிப்பாணை வெளியிடப்பட்டது. மதுரை ஆவினில் 772 , வாக்காளர்கள் உள்ளனர். தேர்தலில் ஒவ்வொரு வாக்காளர்களும் 9 வாக்குகளை பதிவு செய்ய வேண்டும்.
நான் திருமங்கலம் தொகுதியில் பொதுப்பிரிவு இயக்குனர் பதவிக்கு பிப்ரவரி 27-ல் வேட்புமனு தாக்கல் செய்தேன். இந்நிலையில் பழனியப்பன், தங்கராஜன், சோமசுந்தரம், தனலெட்சுமி, உள்ளிட்ட 13 பேரின் வேட்புமனுக்கள் மட்டும் ஏற்கப்பட்டதாகவும், மற்ற அனைவரின் வேட்புமனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டதாகவும் தேர்தல் அலுவலர் அறிவித்தார்.
இதனால், மதுரை ஆவின் இயக்குனர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதாக பிறப்பித்த உத்தரவை ரத்து செய்தும், கால்நடைத் துறை தவிர்த்து பிற துறையை சேர்ந்தவர்களை தேர்தல் அலுவலராக நியமித்தும், மதுரை ஆவின் இயக்குனர்கள் குழு தேர்தலை புதிதாக நடத்த உத்தரவிட வேண்டும் எனவும் கோரியிருந்தார்.
இந்த மனு, இன்று(பிப்.11) நீதிபதிகள் சுந்தரேஷ், ஆனந்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், மதுரை மாவட்ட ஆவினில் 11 இயக்குநர்களை தேர்ந்தெடுக்க புதிதாக அறிவிப்பானை வெளியிட்டு, 3 மாதத்தில் தேர்தல் நடத்த வேண்டும்; தேர்தல், வெளிப்படையாகவும், விதிமுறைபடியும் நடத்த வேண்டும் என உத்தரவிட்டனர்.
இதையும் படிங்க: சார்பு ஆய்வாளர்களை தேர்தல் நடைபெறும்போது வேறு மாவட்டத்திற்கு பணிமாற்ற தடை கோரிய வழக்கு