இவ்வழக்கில் புகார் கொடுத்த பெண் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி, காவல்துறையினர் மிரட்டி, துன்புறுத்திய காரணத்தால் தான் வழக்குரைஞர் மீது பொய்யான புகார் அளித்ததாகக் கூறியதை பதிவு செய்த நீதிமன்றம், வழக்குரைஞர் மீதான பொய் பாலியல் புகாரை ரத்து செய்து உத்தரவிட்டது.
ராமநாதபுரம் மாவட்டம், தொண்டியைச் சேர்ந்தவர் வழக்குரைஞர் கலந்தர் ஆசிக் அகமது என்பவர் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், "தொண்டியில் போலி டாக்டர் ராஜலட்சுமி கைது செய்யப்பட்ட சம்பவத்தில் என்னையும் வேண்டுமென்றே காவல்துறையினர் இணைத்தனர். இவ்வழக்கில் காவல்துறையினர் என்னை கைது செய்தனர்.
இதுதொடர்பான வழக்கு விசாரணைக்கு சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை இடைக்கால தடை விதித்தது. பின்னர், திருவாடனை டி.எஸ்.பி. புகழேந்தி கணேஷ் உள்ளிட்ட போலீசார் என் மீது போலி டாக்டர் ராஜலட்சுமியிடம் பொய் புகார் பெற்று, மேலும் ஒரு வழக்கைப் பதிவு செய்தனர். என்னை பழிவாங்கும் நோக்கத்தில் பல்வேறு கொடுமைகளை டி.எஸ்.பி.புகழேந்திகணேஷ் உள்ளிட்ட போலீசார் மேற்கொண்டனர்.
என் மீதான பொய் வழக்கை ரத்து செய்ய வேண்டும். சம்பந்தப்பட்ட போலீசாரின் மீது துறை ரீதியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என மனுவில் கோரியிருந்தார். இவ்வழக்கை ஏற்கனவே விசாரித்த நீதிமன்றம் டி.எஸ்.பி., இன்ஸ்பெக்டர், ராஜலட்சுமி உள்ளிட்டோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது. அதன்பேரில், போலி டாக்டர் ராஜலட்சுமி தாக்கல் செய்த பதில் மனுவில், வழக்குரைஞர் கலந்தர் ஆசிக் அகமதுவுக்கு எதிரான பொய் புகார் கொடுக்கும்படி போலீசார் என்னை வற்புறுத்தினர்.
அதன்பேரில் அவர் மீது பாலியல் புகாரும், சாதியை சொல்லி திட்டியதாகவும் பொய் புகார் அளித்தேன் என்று அவர் தாக்கல் செய்த பதில் மனுவில் குறிப்பிட்டிருந்தார். இந்த நிலையில், இவ்வழக்கு நீதிபதி நிஷாபானு முன்பு மீண்டும் இன்று(டிச.1) விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி முன்பு ஆஜரான ராஜலட்சுமி, மனுதாரருக்கும், எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. காவல்துறையினரின் வற்புறுத்தல் காரணமாக தான் நான் புகார் அளித்தேன் என்று தெரிவித்தார். இதை பதிவு செய்த நீதிபதி, மனுதாரர் மீது போலீசார் பதிவு செய்த வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டு, விசாரணையை ஒத்திவைத்தார்.