மதுரை ஆத்திகுளத்தைச் சேர்ந்த பூமயில், உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார். அதில் எனது கணவர் பெயர் மார்க்கண்டேயன், எனக்கு 2 மகள்கள் உள்ளனர். கடந்த 2011 ஆம் ஆண்டில் எனது மூத்த மகள் திடீரென காணாமல் போனார். இதுதொடர்பாக ஊமச்சிகுளம் காவல்நிலையத்தில் புகார் அளித்தோம். காவல்துறையினர் என் கணவரை விசாரணைக்கு அழைத்துச் சென்றனர். மறுநாள் என் கணவர் காவல் நிலையத்தின் பின்புறம் தூக்கியிட்டு தற்கொலை செய்து கொண்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
அது உண்மையல்ல. காவல்துறையினர் என் கணவரை இரவு முழுவதும் அடித்து துன்புறுத்தியுள்ளனர். இதில் மனமுடைந்து அவர் தற்கொலை செய்துள்ளார். என் கணவர் மரணத்துக்கு காரணமான காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தார். இந்த வழக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. இதில், உள்துறை செயலர் சார்பில் உள்துறை துணை செயலர் தாக்கல் செய்த பதில் மனுவில், மனுதாரரின் கணவர் காவல் நிலையத்தில் தற்கொலை கொண்டுள்ளார்.
அவர் காவல்துறையினர் மனரீதியாக துன்புறுத்தப்பட்டது நிரூபிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக ஊமச்சிக்குளம் சரக டி.எஸ்.பி. தங்கவேலு, காவல் ஆய்வாளர் பாலாஜி, பெண் சார்பு ஆய்வாளர் ராதா மகேஷ், சிறப்பு எஸ்.ஐ. சி.ஜெயராமன் (அனைவரும் சஸ்பெண்ட்டில் உள்ளனர்). ஏட்டு சோலை மலை கண்ணன், ஏட்டு முருகன் ஆகியோர் மீது துறை ரீதியாக நடவடிக்க எடுக்க பரிந்துரைக்கப்பட்டது. மேலும் இதுகுறித்து விரைவில் இறுதி முடிவெடுக்கப்படும். இதனால் 2 மாதம் அவகாசம் வழங்க வேண்டும் என கூறப்பட்டிருந்தது.
இதனையடுத்து இறுதி விசாரணைக்காக இந்த வழக்கை ஆகஸ்ட் 13ஆம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.