ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ். மங்கலம் அருகே உள்ள சேத்திடல் கிராமத்தைச் சேர்ந்த குணசேகரன் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், "எங்கள் கிராம மக்கள் சார்பாக, பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் குருபூஜை விழா கொண்டாடவுள்ளோம். இதனையொட்டி கிராமத்தில் கலை நிகழ்ச்சிகள், விளையாட்டுப் போட்டிகள், அன்னதானமும் வழங்க முடிவு செய்துள்ளோம். இதற்காக, வரும் அக்டோபர் 29, 30 ஆகிய இரு தினங்களும் எங்கள் கிராமத்தில் விழா நடத்தப்படவுள்ளது.
எனவே, அந்த இரு நாள்களும், விழாவிற்காக ஒலிப்பெருக்கிப் பயன்படுத்த காவல் துறையிடம் அனுமதி கோரியுள்ளோம். அந்த விழாவில் பேனர் கட்டவோ, கூம்பு வடிவ குழாய் அமைக்கவோ மாட்டோம் என உறுதி கூறியும் காவல் துறை எவ்வித பதிலும் அளிக்கவில்லை. எனவே அக்டோபர் 29, 30 ஆகிய இரு நாள்களும் விழா நடத்தவும் ஒலிப்பெருக்கி பயன்படுத்தவும் அனுமதி வழங்க வேண்டும்" எனக் கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதி இளந்திரையன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரரின் மனுவை பரிசீலித்து ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உரிய உத்தரவு பிறப்பிக்க உத்தரவிட்டு வழக்கு முடித்துவைக்கப்பட்டது.
இதையும் படிக்கலாமே: தேவர் ஜெயந்திக்காக 10ஆயிரம் காவலர்கள் பாதுகாப்பு - ஏடிஜிபி ஜெயந்த் முரளி தகவல்