மதுரை: இலங்கையை சேர்ந்த தங்க நகை வியாபாரிகளிடமிருந்து 1.5 கிலோ தங்கத்தை மதுரை விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் சட்டவிரோதமாக பறிமுதல் செய்ததாக தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரைக்கிளை சம்பவம் நடைபெற்ற நாளின் சிசிடிவி காட்சிகளை சேமித்து பாதுகாக்குமாறு உத்தரவிட்டுள்ளது.
இலங்கை கொழும்புவை சேர்ந்தவர், முகமது இஷாதிர். இவர் ஒரு தங்க நகை வியாபாரி. இவர் துபாய், ஒமன் உள்ளிட்ட நாடுகளில் இருந்து தங்கத்தை வாங்கி அதனை இலங்கை உள்ளூர் சந்தைகளில் விற்பனை செய்து வருகிறார். இவர் 2023 அக்டோபர் 12ஆம் தேதி துபாய் நாட்டில் இருந்து முறைப்படி, வரி செலுத்தி உரிய ஆவணங்களுடன் 900 கிராம் தங்கம் வாங்கி அதனை இலங்கையில் விற்பனை செய்வதற்காக எடுத்து வந்துள்ளார்.
இவர் துபாயில் இருந்து இணைப்பு விமானம் மூலம் இலங்கை செல்வதற்காக மதுரை விமான நிலையத்திற்கு வந்துள்ளார். இதேபோல், அவருடன் அவரது நண்பரான ரஹ்மானும் 600 கிராம் தங்கத்திற்கான ஆவணங்களோடு வந்துள்ளார். இருவரும் சர்வதேச பயணிகள் காத்திருக்கக் கூடிய காத்திருப்பு அறையில் பேசிக் கொண்டு இருந்துள்ளனர்.
அப்போது, 5 சுங்கத்துறை அதிகாரிகள் அவர்களை சோதனையிட்டு ஆவணங்களை கேட்ட நிலையில், பாஸ்போர்ட், விசா மற்றும் தங்கத்திற்கான உரிய ஆவணங்களை இருவரும் காண்பித்துள்ளனர். ஆவணங்களை காண்பித்தப் பின்னரும் அவருடைய 900 கிராம் தங்கம் மற்றும் அவரது நண்பரின் 600 கிராம் தங்கத்தையும் அதிகாரிகள் பறிமுதல் செய்ததாக கூறப்படுகிறது. மேலும், அவர்களை கடுமையாக அடித்து துன்புறுத்தியதோடு, சட்டத்திற்கு புறம்பாக 1.5 கிலோ தங்கத்தை அவர்களிடம் இருந்து பறித்துச் சென்றுள்ளனர்.
இதையும் படிங்க: நண்பரை கட்டையால் அடித்துக் கொன்ற வழக்கு: வேலூர் சிறப்பு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!
இந்நிலையில் தங்க நகை வியாபாரி முகமது இஷாதிர், இது குறித்து விமான நிலைய அதிகாரிகளிடம் எடுத்துக்கூறி, முறையிட்டு மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால் அவர் உயர் நீதிமன்ற மதுரைக்கிளை மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், 'நாங்கள் தங்கம் கடத்துபவர்கள் அல்ல. உரிய ஆவணங்களுடன் வாங்கி விற்பனை செய்யக்கூடியவர்கள்.
நாங்கள் இந்தியாவிற்கு செல்வதற்காக வரவில்லை, துபாயிலிருந்து இணைப்பு விமான மூலம் இலங்கை செல்வதற்காக மட்டுமே மதுரை விமான நிலையத்தில் காத்திருந்தோம். எங்களிடமிருந்து நகைகளை பறிமுதல் செய்தது சட்டவிரோதம். இணைப்பு விமானத்திற்காக காத்திருந்தபோது சுங்கத்துறை ஆணையர், இணை ஆணையர் இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.
எனவே, இந்த வழக்கு முக்கிய சாட்சியாக உள்ள மதுரை விமான நிலையத்தின் 2023 அக்டோபர் 12 ஆம் தேதி சிசிடிவி காட்சிகளை பாதுகாத்து வைக்க விமான நிலைய இயக்குனருக்கு உத்தரவு பிறப்பிக்க வேண்டும். மேலும், எங்களது மனு குறித்து உரிய விசாரணை நடத்தி என்னிடம் பறிமுதல் செய்யப்பட்ட தங்கத்தைத் திரும்ப ஒப்படைக்க உத்தரவிட வேண்டும்' எனக் கூறியுள்ளார்.
இந்நிலையில் இந்த மனு, நீதிபதி புகழேந்தி முன்பு இன்று (ஜன.6) விசாரணைக்காக வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, இதுபோன்று புகார்கள் தற்போது அடிக்கடி ஏன் வருகிறது? என கேள்வியெழுப்பினார். மேலும், மனுதாரர் புகார் குறித்து விமான நிலைய பாதுகாப்பு தென் மண்டல இணை இயக்குனர், சுங்கத்துறை ஆணையர் மற்றும் மதுரை விமான நிலைய இயக்குனர் தரப்பில் பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டார்.
இதைத்தொடர்ந்து சம்பவம் நடைபெற்றதாக கூறப்படும், அக்டோபர் மாதம் 12 ஆம் தேதி விமான நிலைய சிசிடிவி காட்சிகளை விசாரணை முடியும் வரை பாதுகாக்க வைத்திருக்குமாறு விமான நிலைய இயக்குனருக்கு உத்தரவிட்டு வழக்கு விசாரணை ஒத்திவைத்தார்.