தேனி மாவட்டத்தைச் சேர்ந்த தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களின் செயலர்கள் 16 பேர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுக்களைத் தாக்கல் செய்திருந்தனர். அதில்,"தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களின் செயலர்கள் அதே சங்கத்தில் பதவி உயர்வு பெற்று ஓய்வு பெறுகின்றனர். இந்நிலையில் தமிழ்நாட்டில் செயலர் பணி பொதுப்பணி நிலைத்திறன் கீழ் கொண்டு வரப்பட்டது.
இந்த பணி நிலை மாறுதலால் செயலர்கள் ஒரு சங்கத்தில் இருந்து இன்னொரு சங்கத்துக்கு இடமாறுதல் செய்யப்படும் நிலை உருவாகியுள்ளது. கூட்டுறவு சங்கங்களை முழுப்பொறுப்புடன் கவனித்துவரும் செயலர்களை இடமாறுதல் செய்யும்போது பல்வேறு பிரச்னைகள் ஏற்படுகின்றன. இதனால் செயலர் பணியை பொதுப்பணி நிலைத்திறன் கீழ் கொண்டு வருவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து இது தொடர்பாக ஆய்வு செய்ய பேராசிரியர் வைத்தியநாதன் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டது. இந்தக்குழு பொது நிலைத்திறன் நிலையின் கீழ் கொண்டு வரப்பட்டதை கைவிட அரசுக்கு 2000ஆம் ஆண்டு பரிந்துரை செய்யப்பட்டது. பின்னர், பொதுப்பணித் திறன் நிலையில் கீழ் இருந்து செயலர் பணியை நீக்கி அரசாணைப் பிறப்பிக்கப்பட்டது.
இந்நிலையில் மீண்டும் செயலர் பணியை பொதுப்பணி நிலைத்திறன் கீழ் கொண்டு வந்து தமிழ்நாடு கூட்டுறவு மற்றும் உணவுத்துறை முதன்மை செயலர் பிப்ரவரி 12ஆம் தேதி அரசாணை பிறப்பித்துள்ளார். இது பேராசிரியர் வைத்தியநாதன் குழுவின் பரிந்துரைக்கு எதிரானது. எனவே அதனை ரத்து செய்து தொடக்க வேளாண் கூட்டுறவு சங்க செயலர் பணியை பொதுப்பணி நிலைத் திறனிலிருந்து நீக்க உத்தரவிட வேண்டும்" என கோரியிருந்தனர்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி அனிதா சுமந்த் இது தொடர்பாக தமிழ்நாடு கூட்டுறவு மற்றும் உணவுத்துறை முதன்மை செயலர் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை இரண்டு வாரத்துக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.