மதுரை: சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையைச் சேர்ந்த ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர் கே.ஆர்.அசோகன் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில், "ஜெ.ஜெயலலிதா அவர்களின் மறைவுக்குப் பின், 2017ஆம் ஆண்டு ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக கட்சி வழிநடத்தப்பட்டு வந்தது.
இந்த நிலையில் 2022ஆம் ஆண்டு ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் ஆகிய பதவிகளை ரத்து செய்துவிட்டு அதிமுக கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டார். அதிமுக கட்சியின் தலைமை குழப்பத்தினால் தற்போது நடைபெற்ற ஈரோடு தேர்தலில் அதிமுக மிகப்பெரிய தோல்வியை சந்தித்தது.
இதனால், அதிமுக சிவகங்கை மாவட்ட கட்சி உறுப்பினர்கள், மூத்த தலைவர்கள் ஒன்றிணைந்து ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் கட்சியில் இருக்கும் மோதல்களை தவிர்ப்பதற்காக சிவகங்கை அரண்மனை வாசல் முன்பு (இன்று) மார்ச் 11ஆம் தேதி காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்து அனுமதி கோரி சிவகங்கை மாவட்ட துணை காவல் கண்காணிப்பாளரிடம் மனு அளிக்கப்பட்டது. ஆனால், இதுவரை ஆர்ப்பாட்டம் அனுமதி வழங்கப்படவில்லை. எனவே, ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி வழங்கி உத்தரவிட வேண்டும்" என அந்த மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதி இளங்கோவன் முன்பு நேற்று (மார்ச்.10) விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழ்நாடு அரசு தரப்பில், சிவகங்கை மாவட்டத்தில் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொள்ளும் நிகழ்வுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதிமுக கட்சியில் இரு தரப்பினரிடையே பிரசனை ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் ஓ.பன்னீர்செல்வம் அணியினர் கலந்து கொள்ளும் ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி வழங்கினால் சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்பட வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து நீதிபதிகள், மனுதாரரிடம் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படாமல் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என சிவகங்கை துணை காவல் கண்காணிப்பாளரிம் உறுதிமொழி பத்திரம் வழங்க உத்தரவிட்டு ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி வழங்கி உத்தரவிட்டார்.
அதிமுகவில் எழுந்த ஒற்றை தலைமை விவகாரம், அதனைத்தொடர்ந்து அடிதடி ரகளை என நடந்த அக்கட்சியின் பொதுக்குழு கூட்டம், அக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களினால் அக்கட்சியில் இருந்து ஓ.பன்னீர்செல்வத்தை நீக்கியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
இந்நிலையில், இந்த தீர்மானத்தை ரத்து செய்யக் கோரி ஓ.பன்னீர்செல்வத்தின் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்திருந்த மனுவின் விசாரணையில் அதிமுக பொதுக்குழு செல்லும் என விதித்த தீர்ப்பு ஓ.பன்னீர்செல்வம் தரப்பிற்கு அதிர்ச்சியையும், அதேநேரத்தில் எடப்பாடி பழனிசாமி தரப்பிற்கு மகிழ்ச்சியையும் ஏற்படுத்தி இருந்தது. இந்நிலையில், இரு தலைவர்களும் இவ்வாறு அக்கட்சியில் உள்ள மோதல்களை தவிர்ப்பதற்காக சிவகங்கையில் ஒன்று சேர உள்ளதாக வெளியான தகவல் மீண்டும் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
இதையும் படிங்க: பயம் என்பது பாஜக டிக்ஸ்னரியில் இல்லை..! அண்ணாமலையை கைது செய்ய வேண்டியது தானே - குஷ்பூ