மதுரை அரசு இராசாசி மருத்துவமனைக்குக் கடந்த நவம்பர் 26ஆம் தேதி அன்று, 26 வயது இளம்பெண் ஒருவர் ரேடியாலஜி ஆய்வகத்தில் அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் எடுக்க வந்துள்ளார்.
அன்று அவருக்கு ஸ்கேன் எடுக்க முடியாது எனக்கூறி மறுநாள் வருமாறு அனுப்பியுள்ளார், ரேடியாலஜி மருத்துவர்.
செவிலியரை வெளியே அனுப்பிய மருத்துவர்
இதையடுத்து, மறுநாள் (நவ.27) வந்த அந்த இளம்பெண்ணை ஆய்வகத்திற்குள் அழைத்துச் சென்ற மருத்துவர், ஆய்வகத்திலிருந்த செவிலியரை வெளியே அனுப்பியுள்ளார்.
பின் சிறிது நேரத்தில் ஆய்வகத்திலிருந்து அழுதுகொண்டே வெளியே வந்த இளம்பெண், அவரது தாயாரிடம், ஸ்கேன் செய்ய அழைத்துச் சென்ற மருத்துவர் அவருக்குப் பாலியல் தொந்தரவு கொடுத்ததாகத் தெரிவித்துள்ளார்.
சம்பவ இடத்திலிருந்த செவிலியரிடம் விசாரணை
இதையடுத்து, அவரது தாயார் உடனடியாக இந்த விவகாரத்தை துறைத் தலைவர் மற்றும் மருத்துவமனை டீன் ஆகியோரிடம் புகாராக அளித்துள்ளார்.
பின்னர், மருத்துவமனை வளாக மருத்துவ அலுவலர் ஒருவரை, அந்தப் புகாரை விசாரிக்க நியமித்தனர். அவர், அந்தப் புகாரை விசாரித்து சம்பவ இடத்திலிருந்த செவிலியரிடம் நடந்த சம்பவம் குறித்து அறிக்கை அளிக்குமாறு அறிவுறுத்தி உள்ளார்.
![மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/13830875_hrgh.jpg)
அந்த அறிக்கையை மருத்துவக் கல்வி இயக்குநரகத்திற்கும் அனுப்பி வைத்துள்ளார்.
மருத்துவர் பணியிடை நீக்கம்
இந்த விவகாரம் குறித்து மருத்துவமனை டீன் ரத்தினவேலிடம் விளக்கம் கேட்டதற்கு, "சம்பந்தப்பட்ட இளம்பெண்ணுக்கு ஸ்கேன் எடுப்பதில் தாமதம் செய்து அலைக்கழிப்பு செய்ததாகவே புகார் உள்ளதாகவும், அது தொடர்பாக துறைத் தலைவரை விசாரிக்க உத்தரவிட்டு உள்ளதாகவும், செவிலியரின் அறிக்கை அரசுக்கு அனுப்பப்பட்டு உள்ளதாகவும்" பதில் அளித்தார்.
இதற்கிடையே புகாருக்கு ஆளான அந்த மருத்துவரை, மருத்துவமனை நிர்வாகம் பணியிடை நீக்கம் செய்துள்ளது.
இதையும் படிங்க: கழிவறைத் தொட்டியில் குழந்தை கொல்லப்பட்ட விவகாரம்: தாய் கைது