மதுரை வடபழஞ்சியைச் சேர்ந்த ரமேஷ் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு ஒன்றினைத் தாக்கல் செய்திருந்தார். அதில்," எனது மனைவி ரம்யா கிருஷ்ணன் மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் செவிலியாக பணிபுரிந்தார். அவர் கருவுற்றவுடன் பணியிலிருந்து நின்றுவிட்டார். நாகமலை புதுக்கோட்டையில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் எனது மனைவி தொடர்ச்சியாக பரிசோதனைகளைச் செய்து வந்தார்.
வளைகாப்பிற்கு பிறகு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அவரது சொந்த ஊருக்கு சென்றதால், வத்திராயிருப்பு தாலுகாவில் உள்ள கூனூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவப் பரிசோதனைகளை மேற்கொண்டுவந்தார். பிரசவத்திற்காக கடந்த 2019ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 11ஆம் தேதி ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்த நிலையில் பெண் குழந்தை பிறந்தது இருவரும் நலமாக இருப்பதாக மருத்துவர் தெரிவித்தார்.
இந்நிலையில், மருத்துவர் புஷ்பலதா அதே பகுதியில் அவரது கணவர் நடத்திவரும் கிருஷ்ணன் மருத்துவமனைக்கு சென்று எனது மனைவிக்கு சில மருந்துகளை வாங்கி வருமாறு தெரிவித்தார். மருந்துகளை வாங்கி விட்டு திரும்பிய என்னிடம், எனது மனைவியை மதுரை அரசு ராசாசி மருத்துவமனைக்கு கொண்டு சென்றிருப்பதாக தெரிவித்தனர்.
நான் அரசு மருத்துவமனைக்குக்கு வந்தபோது எனது மனைவி உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். மருத்துவ குழுவின் கவனக்குறைவு, உயிர் காக்கும் மருந்துகள் ஆரம்ப சுகாதார நிலையத்தில் இல்லாத காரணத்தாலேயே என் மனைவி உயிரிழந்தார். இதுதொடர்பாக கிருஷ்ணன்கோவில் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
எனவே மருத்துவர்களின் அலட்சியத்தால் மனைவியை இழந்து, குழந்தையை பராமரிக்க சிரமப்பட்டு வரும் எனக்கு உரிய இழப்பீடு வழங்க உத்தரவிட வேண்டும்" எனக் கோரியிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா இதுகுறித்து சுகாதாரத் துறை முதன்மைச் செயலர், விருதுநகர் மாவட்ட ஆட்சியர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை நான்கு வாரங்களுக்கு ஒத்தி வைத்தனர்.
இதையும் படிங்க:சாலையில் நிரம்பி வழியும் கழிவுநீர் - துர்நாற்றத்தால் மக்கள் அவதி