2019 மக்களவைத் தேர்தலின்போது, மதுரை மருத்துவக் கல்லூரியில் இருந்த வாக்கு இயந்திர அறைக்குள் வட்டாட்சியர் சம்பூர்ணம் நுழைந்த பிரச்னையில், அப்போது மதுரையின் ஆட்சியராக இருந்த நடராஜன் மாற்றம் செய்யப்பட்டார். தேர்தல் ஆணையம் மேற்கொண்ட இந்த நடவடிக்கைக்குப் பிறகு, மதுரை மாவட்ட ஆட்சியராக நாகராஜன் பொறுப்பேற்றுக் கொண்டார்.
தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், அரசியல்வாதிகளின் தலையீடின்றி இரவோடு இரவாக அங்கன்வாடி ஊழியர்கள் ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு நாகராஜன் பணி நியமன ஆணைகளை வழங்கினார். மிக நேர்மையான ஆட்சியர் என்று பெயர் பெற்ற நாகராஜன் அரசியல்வாதிகளின் தலையீடு காரணமாக மதுரையிலிருந்து பணியிட மாற்றம் செய்யப்பட்டார். இந்த சம்பவம் மதுரை மக்களிடையே பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.
பணியிட மாற்றம் செய்யப்பட்டது குறித்து பலவித சந்தேகங்களை எழுப்பினர். இதனைத்தொடர்ந்து, சென்னை ஊரக வளர்ச்சித் துறையில் பணி புரிந்த ராஜசேகர் மதுரை மாவட்ட ஆட்சியராக ஜூலை முதல் தேதி பொறுப்பேற்றார். இரண்டு மாதங்களே ஆட்சியராக இருந்த ராஜசேகர், அக்டோபர் 4ஆம் தேதி விடுப்பில் சென்றார் ஆனால் அவர் இன்றுவரை பணிக்குத் திரும்பவில்லை.
அவர் தொடர் விடுப்பில் இருப்பதாகவும், இதற்கு ஆளுங்கட்சி தரப்பில் கொடுக்கப்படும் பல்வேறு நெருக்கடிகள்தான் காரணம் என்றும் கூறப்படுகிறது. இந்நிலையில், அரியலூர் மாவட்ட ஆட்சியராக இருந்த டாக்டர் டி.ஜி. வினய், தற்போது மதுரை மாவட்ட ஆட்சியராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
மேலும், கடந்த ஆறு மாதங்களுக்குள் நான்காவது முறையாக மதுரை மாவட்டத்திற்கு ஆட்சியர் மாறுதல் செய்யப்பட்டுள்ளது புதிய சாதனை என்று சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.