மதுரை: மதுரை மாவட்டம், ஏழுமலைப் பகுதியைச் சேர்ந்த பிரவீன்குமார் என்பவர் உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் பொதுநல மனு ஒன்றினை தாக்கல் செய்திருந்தார். அதில், "மதுரை மாவட்டம் பேரையூர் தாலுகா எழுமலை, பேரூராட்சி ஆகும். மேலும், எழுமலை கிராமம் மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ளது.
இந்த எழுமலையில் 107 ஏக்கர் பரப்பளவில் உள்ள பெரியகுளம் கண்மாய் மூலமாக தற்போது பெய்த கன மழையால் கிராம ஓடைகளில் தண்ணீர் வரத்து அதிகரித்து நிரம்பி உள்ளது. இந்த கண்மாயில் எழுமலை கிராமத்திற்குத் தேவையான குடிநீர் எடுக்கப் பேரூராட்சி நிர்வாகத்தால் ஆழ்துளைக் கிணறு அமைக்கப்பட்டுள்ளது.
மேலும், எழுமலை கிராமம் மட்டுமல்லாது அதனைச் சுற்றி உள்ள பல்வேறு கிராமங்களுக்கும் இந்த கண்மாய் தான் குடிநீர் ஆதாரமாகவும் உள்ளது. இந்த கண்மாயின் ஒரு பகுதியில் பேரூராட்சியில் சேரும் குப்பை கழிவுகள் அனைத்தையும் பேரூராட்சி நிர்வாகம் கொட்டுகிறது.
இதில், மக்கும் குப்பை, மக்காத குப்பை மற்றும் மருத்துவ கழிவுகள் அனைத்தும் இந்த கண்மாயில் கொண்டு வந்து
கொட்டி சுகாதார சீர்கேடு ஏற்படுத்துவதுடன் அவ்வப்போது குப்பைகளைத் தீயிட்டு எரிப்பதால் காற்று மாசு அடைவதுடன் நீர்நிலை , சுற்றுச்சூழல் மாசு ஏற்படுகின்றது.
இதனைத் தடுக்க, பேரூராட்சி நிர்வாகத்திடம் பலமுறை மனு கொடுத்தும் சுகாதார சீர்கேட்டைத் தடுக்க பேரூராட்சி செயல் அலுவலர் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. ஆகவே, நீர்நிலை மற்றும் சுற்றுச்சூழல் மாசடைவதைத் தடுக்கும் வகையில் குடிநீர் கண்மாய் பகுதியில் கொட்டப்பட்ட குப்பைகளை அகற்றவும் குப்பைகளைக் கொட்ட அதற்கான தனி இடத்தை ஒதுக்க உத்தரவிட வேண்டும்" என்று மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதிகள் சுவாமிநாதன் மற்றும் புகழேந்தி ஆகியோர் கொண்ட அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், குடிநீர் கண்மாயில் குப்பை கழிவுகளைக் கொட்டுவதற்குத் தடைவிதித்து, மனு குறித்து மாவட்ட ஆட்சியர் மற்றும் பேரூராட்சி செயல் அலுவலர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்திவைத்தனர்.
இதையும் படிங்க: ஜனவரி 13ஆம் தேதி முதல் தமிழகத்தில் வறண்ட வானிலை - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்..