தமிழ்நாடு மகா சௌராஷ்டிரா சபையின் மேலாண்மை அறங்காவலர் ஆர்.கே. பாஸ்கர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல வழக்கினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், "மதுரை தெப்பக்குளத்தில் அனுப்பானடி பிரதான சாலையில் சௌராஷ்டிரா பெண்கள் மேல்நிலைப்பள்ளி, மதுரை காந்தி எம்என்எம்ஆர் பெண்கள் கல்லூரி ஆகியவை அமைந்துள்ளன. பள்ளியில் மூன்றாயிரத்துக்கும் அதிகமான மாணவிகள் பயின்று வருகின்றனர்.
60 ஆண்டுகளுக்கு முன்னர் தொடங்கப்பட்ட இப்பள்ளி மக்கள் நெருக்கம் அதிகமுள்ள பகுதியில் அமைந்துள்ளது. இப்பள்ளியின் மையப்பகுதியில் ஐந்து மின்கம்பங்கள் உள்ளன. இவற்றில் உயர் அழுத்த மின் கம்பிகள் செல்கின்றன. மழைக்காலங்களில் மின்கம்பத்தில் மின்சாரம் பாயும் வாய்ப்புள்ள நிலையில், பள்ளி மாணவர்களை மின் தாக்குதல் விபத்துகளிலிருந்து பாதுகாக்க வேண்டியது அரசின் கடமை.
இது தொடர்பாக நடவடிக்கை கோரி பலமுறை மின்வாரியத்திடம் முறையிட்டும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஆகவே மதுரை அனுப்பானடி பிரதான சாலையில் அமைந்துள்ள சௌராஷ்ட்ரா பெண்கள் மேல்நிலைப் பள்ளியின் மையப்பகுதி வழியாகச் செல்லும் உயர் அழுத்த மின்கம்பங்களை அகற்ற உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் சிவஞானம், தாரணி அமர்வு, ஏதேனும் விபத்துகள் நிகழ்ந்தால், மாணவிகள், குழந்தைகள் பாதிக்கப்படுவர். ஆகையால் மனுவை பரிசீலித்து 6 மாதத்திற்குள்ளாக மின் கம்பங்களை வேறு இடத்திற்கு மாற்ற மதுரை மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டு வழக்கை முடித்துவைத்தனர்.
இதையும் படிங்க: இனி 'பேனர்' என்ற பேச்சுக்கு இடமே இல்லை! - உயர் நீதிமன்றம் அதிரடி