கரோனா தொற்று பரவும் தீவிரத்தை தடுப்பதற்காக மதுரை மாநகராட்சி பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் நிலையில், ஆங்காங்கே தன்னார்வலர்கள் தங்களால் இயன்ற சேவையை செய்து வருகின்றனர். அந்த வகையில், மதுரை டிவிஎஸ் நகர் பகுதியைச் சேர்ந்த கண்ணன் -கீதா தம்பதி, நாள்தோறும் 2 ஆயிரம் லிட்டர் கபசுரக் குடிநீர் தயார் செய்து அப்பகுதி மக்களுக்கு இலவசமாக விநியோகம் செய்து வருகின்றனர்.
மாண்டிசோரி பள்ளி ஒன்றை நடத்திவரும் இத்தம்பதி, பொதுமுடக்கத்தால் பள்ளிகள் திறக்கப்படாததால், தங்களது பள்ளி வளாகத்தை கபசுர குடிநீர் மையமாக அறிவித்து, மக்களுக்கு சேவை செய்து வருகின்றனர். இந்த சேவையை மதுரை மாநகராட்சி ஆணையர் விசாகன் பாராட்டி மாநகராட்சி மூலமாக தேவையான உதவிகளைச் செய்து வருகிறார்.
இதுகுறித்து கண்ணன் -கீதா கூறியதாவது, "மக்களுக்கு கபசுர குடிநீர் எவ்வாறு தயாரிப்பது என்பது குறித்த பயிற்சியை மதுரை மாநகராட்சி வழங்கியது. இதில் நாங்கள் பயிற்சி எடுத்துக்கொண்டு எங்களது பள்ளி வளாகத்தை கபசுரக் குடிநீர் மையமாக அறிவித்து தினமும் காலை 8 மணியிலிருந்து மக்களுக்கு வழங்குகிறோம். நாங்கள் தயாரிக்கும் கபசுரக் குடிநீர் 3 மற்றும் 4ஆவது மண்டலத்தில் உள்ள மக்களுக்கு வழங்கப்படுகிறது.
மக்களுக்கு நேரடியாக வழங்குவதற்கு எங்கள் வீடு அமைந்துள்ள டிவிஎஸ் நகர் ராஜம்ரோடு சந்திப்பில் ஒரு கபசுரக் குடிநீர் மையம் வைத்துள்ளோம். அங்கு தினமும் 150 லிட்டர் கபசுரக் குடிநீரை வழங்கி வருகிறோம்" என்றனர். இவர்களது சேவையை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தனது ட்விட்டர் பக்கத்தில் பாராட்டி வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.
இதையும் படிங்க: மலைவாழ், பழங்குடியின மக்கள் பகுதிகளுக்கு நேரில் சென்று நிவாரணம் வழங்க நீதிமன்றம் உத்தரவு