மின்கசிவால் கணினி விற்பனை கடையில் தீ!
மதுரை வடக்குவெளி வீதியில் ஜெகன்நாத் என்பவருக்குச் சொந்தமான தனியார் கணினி விற்பனை நிறுவனத்தில் நேற்றிரவு ஒன்பது மணியளவில் ஏற்பட்ட மின்கசிவின் காரணமாக கடை முழுவதிலும் தீ பரவி எரியத் தொடங்கியது.
அதிகரித்த தீயின் வீரியம்
கடை முழுவதும் மின்னணு பொருட்கள் என்பதால் தீயின் வீரியம் மேலும் அதிகரித்து அதிகளவில் புகை மூட்டம் ஏற்பட்டது. இதனால் வாகனங்கள் மாற்றுப் பாதையில் திருப்பிவிடப்பட்டன.
இதையடுத்து, அப்பகுதி தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின் பேரில் விரைந்துவந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
கட்டுக்கடங்காத தீ! 10-க்கும் மேற்பட்ட வாகனங்கள் வரவழைப்பு
இருப்பினும், தீயை கட்டுப்படுத்த முடியாததால் மேலும் பத்திற்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, அவ்வாகனங்கள் விரைந்துவந்து தீயை அணைக்க கடுமையாகப் போராடின.
மேலும், தீயானதும் அடுத்தடுத்த கட்டடங்களுக்கு பரவாமல் அணைக்கும் முயற்சியிலும் தீயணைப்புத் துறையினர் தீவிரமாக செயல்பட்டனர். இதையடுத்து, இன்று காலை ஆறு மணியளவில் தீ முழுவதும் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.
ஐந்து கோடி மதிப்புள்ள கணினி பொருட்கள் எரிந்து நாசம்
இந்தத் தீ விபத்தில் நிறுவனத்திலுள்ள ஐந்து கோடி மதிப்புள்ள கணினி பொருட்கள், உபகரணங்கள் எரிந்து நாசமாகின. இது குறித்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவருவதாகக் கூறப்படுகிறது.