மதுரை: மதுரை நகர் முழுவதும் பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டி ஒன்றில், 'ஓரளவுக்கு மேல நம்ம கிட்ட பேச்சே கிடையாது வீச்சு தான்' என குறிப்பிட்டுள்ள வாசகம் கடும் சர்ச்சையை கிளப்பியுள்ளன. சுவரொட்டியை வெளியிட்ட நபர்கள் மீது காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், இந்த சுவரொட்டி வெளியிட்டதற்காக பாஜக தலைமை வருத்தம் தெரிவிக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி அறிக்கை வெளியிட்டுள்ளன.
மதுரையின் பல்வேறு பகுதிகளில் பாஜக சார்பில் தகவல் தொழில்நுட்ப மாநிலச் செயலாளர் விஷ்ணு பிரசாத் என்பவர் ஒட்டி உள்ள போஸ்டர்களில் 'ஓரளவுக்கு மேல நம்மகிட்ட பேச்சு கிடையாது வீச்சு தான்' என்ற வாசகத்தோடு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை படத்துடன் சுவரொட்டிகளை ஒட்டி உள்ளார். இந்த சுவரொட்டிகள் வன்முறையை தூண்டும் வகையில் இருப்பதாக மதுரை மாநகர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கண்டன அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
அதில், “அரசியல் தளத்தில் மத நல்லிணக்கம், மக்கள் ஒற்றுமையை முன்னிறுத்துவதோடு, அதற்காக மதுரை மக்கள் தொடர்ந்து குரல் எழுப்பி வருகிறார்கள். தமிழகத்தில் மக்கள் ஒற்றுமையும் மத நல்லிணக்கமும் பாதுகாக்கப்பட்டு வரும் சூழலில் அதை சீர்குலைக்கும் வகையில் வன்முறையை தூண்டும் வகையிலும் இந்த சுவரொட்டி வெளியிடப்பட்டுள்ளது கண்டிக்கத்தக்கது என தெரிவித்துள்ளனர்.
மத்திய பாஜக அரசின் மக்கள் விரோத செயல்பாடுகளை விமர்சிக்கும் அரசியல் கட்சிகளை மிரட்டும் வகையில் ஜனநாயக சக்திகளை அச்சுறுத்தும் சுவரொட்டி வெளியிடப்பட்டுள்ளது. இதை வெளியிட்ட நபர்கள் மீது மதுரை மாநகர் காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.
இந்த சுவரொட்டி வெளியிட்டதற்காக பாஜக தலைமை வருத்தம் தெரிவிக்க வேண்டும். மேலும், இத்தகைய வன்முறையாளர்களை அரசியல் களத்தில் இருந்து அப்புறப்படுத்தி ஜனநாயகம் காக்க மதுரை மக்கள் முன்வர வேண்டும்” என்று அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. பாஜகவினர் ஒட்டிய போஸ்டருக்கு கம்யூனிஸ்ட் கட்சியினர் கண்டனம் தெரிவித்துள்ளதால் மதுரையில் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.
இதையும் படிங்க: TTF Vasan Arrest: நண்பர் வீட்டில் பதுங்கி இருந்த யூடியூபர் டிடிஎஃப் வாசன் கைது!