மதுரை ஆரப்பாளையம் அருகே கிராஸ் ரோடு பகுதியில் வீட்டு வாசலில் நிறுத்தி வைக்கபடும் இருசக்கர வாகனங்களில் உள்ள பெட்ரோல் தொடர்ந்து பல மாதங்களாக திருடு போவதாக புகார் எழுந்தது. இதனையடுத்து அந்தப் பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தபோது நள்ளிரவு இரண்டு மணியளவில் இருசக்கர வாகனத்தில் வரும் மூன்று இளைஞர்கள் தெருவில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள இருசக்கர வாகனங்களில் இருக்கும் பெட்ரோல்களை வாட்டர் கேன்களில் பிடிக்கும் காட்சிகள் பதிவாகி உள்ளன.
இதையடுத்து, சிசிடிவி கேமரா காட்சிகளை ஆதாரமாகக் கொண்டு அப்பகுதி மக்கள் காவல் துறையினரிடம் புகார் அளித்தனர். அதனடிப்படையில், காவல் துறையினர் நடத்திய விசாரணையில், திருட்டு சம்பவங்களில் கல்லூரி மாணவர்கள் ஈடுபட்டதும், கஞ்சா வாங்குவதற்காக இதுபோன்ற திருட்டுகளில் ஈடுபட்டதும் தெரியவந்துள்ளது.
அதுமட்டுமில்லாமல், கடந்த ஒரு மாதத்தில் அப்பகுதியில் பத்திற்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள் திருடப்பட்டுள்ளதாகவும் பொதுமக்கள் கூறுகின்றனர். வாகன திருட்டு குறித்தும் போலிசார் விரைந்து நடவடிக்கை எடுக்கவும் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். வீட்டு வாசலில் நிறுத்தப்படும் வாகனத்திலுள்ள பெட்ரோல்களை கல்லூரி மாணவர்கள் திருடும் இந்த சம்பவம் மதுரை மக்களிடம் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.