மதுரை மாவட்டம் பேரையூர் அருகே உள்ளது பி.சுப்புலாபுரம். இந்தக் கிராமத்தைச் சேர்ந்த ஒடுக்கப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த வேலுவின் மகன் சண்முகவேல்(50). இவர் உடல்நிலை குன்றிய நிலையில், மதுரையிலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் உடல்நிலை மோசமாகிக் கடந்த ஆகஸ்ட் 16ஆம் தேதி உயிரிழந்தார். அப்போது பெருமழை பெய்யவே மேற்கூரை இல்லாத ஒடுக்கப்பட்ட மக்களுக்கான சுடுகாட்டில் சடலத்தை எரிக்க முடியாத சூழல் ஏற்பட்டது. இதையடுத்து ஆதிக்க சாதியினருக்கான சுடுகாட்டில் மேற்கூரை இருக்கவே, அவர்களிடம் உதவி கேட்கப்பட்டுள்ளது. அதற்கு ஆதிக்கசாதியினர் தங்களது சுடுகாட்டைத் தரமறுக்கவே, ஒடுக்கப்பட்ட மக்கள் தார்ப்பாயைப் பிடித்த நிலையில், அதனடியில் சடலத்தை வைத்து எரியூட்டியுள்ளனர். இந்த செயல் பல்வேறு தரப்பினரிடையே எதிர்ப்புக் குரலைக் கிளப்பியிருக்கிறது.
இச்சம்பவம் குறித்து தே.கல்லுப்பட்டி மார்க்சிஸ்ட் கட்சி ஒன்றிய செயலாளர் சமயன் கூறுகையில், 'பி.சுப்புலாபுரம் கிராமத்திலுள்ள தாழ்த்தப்பட்டோருக்கான சுடுகாட்டில், சண்முகவேல் உடலை எரியூட்டுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வந்தன. ஆகஸ்ட் 17ஆம் தேதி உடல் எரியூட்டுவதற்காகக் கொண்டு செல்லப்பட்ட நிலையில், அன்று காலையிலிருந்தே கடும் மழை.
ஆதிக்க சாதியினருக்கும், ஒடுக்கப்பட்டோருக்கும் இங்கே தனித்தனி சுடுகாடுகள் உள்ளன. ஆனால் ஆதிக்க சாதி சுடுகாட்டில் மட்டும் தகனமேடை, மேற்கூரை என போதுமான வசதிகள் உள்ளன. ஆனால் ஒடுக்கப்பட்டோருக்கான சுடுகாட்டில் இவை எதுவும் இல்லை. மழைநேரம் என்பதால் இதற்காக அவர்களது தகன மேடையில் பிணத்தை எரிக்க அனுமதி கோரினோம். அவர்கள் தரவில்லை.
இதனால் ஒடுக்கப்பட்டோருக்கான சுடுகாட்டின் ஒதுக்குப்புறமாக உள்ள ஒரு மேட்டில் தார்ப்பாய் போட்டு பிணத்தை எரிக்க வேண்டியதாகிவிட்டது. சம்பிரதாயங்களுக்குப் பிறகு சிலர் சென்று ஆதிக்க சாதியினரிடம் ஏன் இவ்வாறு செய்தீர்கள் என்று கேள்வி எழுப்பினர். இதனைப் பொறுத்துக் கொள்ளாத சிலர் தாழ்த்தப்பட்டோர் தரப்பிலிருந்து தாக்குதல் நடத்தினார்கள் எனப் பொய்யாகப் புகார் மனு ஒன்றை பேரையூர் காவல் நிலையத்தில் அளித்தனர். இருதரப்பும் ஒருவருக்கொருவர் பேசி முடித்திருக்க வேண்டிய விஷயத்தை ஆதிக்க சாதியினர் காவல்துறை வரை கொண்டுசென்று தேவையின்றி பெரிதாக்கிவிட்டனர்' என்றார்.
இதுகுறித்து தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் தலைவர் செல்லக்கண்ணு கூறுகையில், 'இந்த சம்பவத்தைப் பொறுத்தவரை ஒரே மயானம். தற்போதைய நிலையில் தாழ்த்தப்பட்டோருக்கான மயானத்தில் தகனமேடை, மேற்கூரை ஆகியவை உடனடியாக அமைத்துத் தர வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் உசிலம்பட்டி கோட்டாட்சியரிடம் வைக்கப்பட்டுள்ளன. இதனை மதுரை மாவட்ட ஆட்சியரிடம் வலியுறுத்தக் கோரியுள்ளோம்' என்றார். அண்மையில் வேலூர் அருகே நடைபெற்ற இதே போன்ற சம்பவத்தின் அதிர்ச்சியிலிருந்து மீண்டெழ முடியாமல் இருக்கின்ற நிலையில், மதுரை மாவட்டம் பேரையூரில் நடைபெற்ற இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது.