மதுரை: அதிமுக கூட்டணியில் உள்ள பாஜகவிற்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகளில் மதுரை வடக்கு சடப்பேரவைத் தொகுதியும் ஒன்று. இந்தத் தொகுதியின் வேட்பாளராக கட்சித் தலைமை தன்னை அறிவிக்கும் என்ற நம்பிக்கையுடன் பாஜகவின் மாநில பொதுச் செயலாளர் இராம. சீனிவாசன் தேர்தல் பணியாற்றிவந்தார்.
ஆனால், திமுகவில் தனக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டதால் ஏற்பட்ட அதிருப்தியில் இன்று பாஜகவில் தன்னை இணைத்துக்கொண்ட திருப்பரங்குன்றம் எம்எல்ஏ சரவணனுக்கு பாஜக சார்பில் போட்டியிட வாய்ப்பளிக்கப்பட்டது. இதுதொடர்பான தகவல்கள் கட்சித் தொண்டர்களிடம் கசியத் தொடங்கியதிலிருந்து, பாஜக நிர்வாகிகள் புதூரில் உள்ள சட்டப்பேரவைத் தொகுதி அலுவலகத்தின் கதவை பூட்டி போராட்டம் நடத்தினர்.
அப்போது, இராம. சீனிவாசனுக்கே இந்தத் தொகுதியை ஒதுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர். முதலில் திமுகவில் இருந்த இவர் அடுத்து பாஜகவிற்கு தாவி பின்னர் மதிமுகவில் இணைந்து மீண்டும் திமுகவிற்கே சென்று திருப்பரங்குன்றம் எம்எல்ஏவானார். தற்போது திமுகவில் சீட்டு மறுக்கப்பட்டதை தொடர்ந்து பாஜகவில் இணைந்துள்ளார்.
கட்சியில் நீண்ட நாள்களாக இருக்கக்கூடிய இராம. சீனிவாசனுக்கே பாஜக தொகுதியை ஒதுக்கி தேர்தலில் போட்டியிட அனுமதிக்க வேண்டும் என கண்டன முழக்கங்களை எழுப்பினர்.
பின்னர், கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து உள்ளிருப்பு போராட்டம் நடத்திவருகின்றனர்.