மதுரை: நியோமேக்ஸ் நிதி நிறுவனம் மதுரையை தலைமையகமாக கொண்டு செயல்பட்டு வருகிறது. இதன் இயக்குனர்களாக வீரசக்தி மற்றும் கமலக்கண்ணன் உள்பட பலர் உள்ளனர். நிறுவனத்துக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அலுவலகங்கள் உள்ளன.
நியோமேக்ஸ் நிறுவனம் மொத்தமாக நிலங்களை விலைக்கு வாங்கி, நகரமைப்பு இயக்குனர் அலுவலக அனுமதி பெற்று, குறைந்தபட்சம் 1,000 மனைகளை உள்ளடக்கி லே-அவுட்டை உருவாக்கி, வாடிக்கையாளர்களுக்கு தனி மனைகளாக விற்பனை செய்கிறது. இதனை நம்பி 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் நிறுவனத்தில் முதலீடு செய்தனர்.
இந்த நிலையில், இந்நிறுவனம் வாடிக்கையாளர்களிடம் நிலங்களை அதிக விலைக்கு விற்று மோசடியில் ஈடுபட்டதாகக் கூறி பொருளாதார குற்றப்பிரிவு காவல் துறையினர் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து பலரை கைது செய்துள்ளனர். மேலும், இந்த நிறுவனத்துக்குச் சொந்தமாக மதுரை, சிவகங்கை, விருதுநகர், கோவில்பட்டி, திருநெல்வேலி, திருவாரூர், ராமநாதபுரம், போடி, பெரியகுளம் ஆகிய பகுதிகளில் ஏராளமான நிலங்கள் உள்ளன.
இந்த நிலையில், கடந்த சில வருடங்களுக்கு முன்பு செல்லம்மாள், நாராயணசாமி மற்றும் மணிவண்ணன் ஆகியோர் நியோமேக்ஸ் நிதி நிறுவனத்தில் பணிபுரிவதாகக் கூறி அறிமுகமாகி, நிதி நிறுவனத்தில் வட்டி அதிகமாக கிடைக்கும் எனக்கூறி 73 லட்சம் ரூபாய் முதலீடு செய்ய வைத்துள்ளதாகத் தெரிகிறது.
அதேநேரம், இந்தப் பணத்திற்கு வட்டியும் கொடுக்காமல், முதலீடு செய்த பணத்தை திரும்ப கேட்டும் தராமல் காலம் தாழ்த்தியதாக கூறப்படுகிறது. எனவே, தாங்கள் முதலீடு செய்த பணத்தை திரும்பத் தரக்கோரி கோவில்பட்டியைச் சேர்ந்த ஜெயசங்கரேஸ்வரன் பொருளாதர குற்றப்பிரிவு காவல் துறையில் புகார் அளித்தார்.
இதன் அடிப்படையில் நியோமேக்ஸ் நிறுவனத்தின் இயக்குனர்கள் மற்றும் அதிகாரிகள் கைது செய்யப்பட்டனர். இந்த நிலையில், இந்த வழக்கில் மேலும் நியோமேக்ஸ் நிறுவனத்தில் ஏஜென்ட்டுகளாக பணிபுரிந்த செல்வக்குமார், நாராயணசாமி ஆகியோர் மீது பொருளாதார குற்றப்பிரிவு காவல் துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.
எனவே இந்த வழக்கில் தங்களுக்கு முன்ஜாமீன் வழங்கக் கோரி நியோமேக்ஸ் நிறுவன ஏஜென்ட்டுகளாக பணியாற்றிய செல்வக்குமார், நாராயணசாமி ஆகியோர் மனுத் தாக்கல் செய்தனர். இந்த மனு நீதிபதி இளங்கோவன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த வழக்கில் கால அவகாசம் கோரப்பட்டதால், வழக்கு விசாரணை வரும் வெள்ளிக்கிழமைக்கு ஒத்தி வைக்கப்பட்டது.
இதையும் படிங்க: நியோமேக்ஸ் நிதி மோசடி விவகாரம்; மாநில அளவில் ஒரு குழு அமைத்து நிவாரணம் வழங்கலாம் - நீதிமன்றம் கருத்து!