மதுரை: தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை காவல் துறையினர், சட்டத்திற்கு புறம்பாக 180 மில்லி லிட்டர் அளவு கொண்ட 23 மதுபாட்டில்கள் வைத்திருந்ததாக செல்வம் என்பவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் தனக்கு ஜாமின் வழங்கக் கோரி செல்வம், உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் ஜாமீன் மனுவை தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு நீதிபதி ஜெகதீஷ் சந்திரா முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத் தரப்பில், "மனுதாரர் 180 மில்லி லிட்டர் அளவு கொண்ட 23 மதுபாட்டில்கள் வைத்திருந்ததாக கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் அவர் மீது 27 முந்தைய வழக்குகள் உள்ளது. எனவே ஜாமின் வழங்கக் கூடாது" என வாதிடப்பட்டது.
இதனையடுத்து மனுதாரர் தரப்பில், "நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள சிரியா மற்றும் துருக்கி நாடுகளுக்கு நிவாரணம் வழங்க தயாராக உள்ளோம்" என தெரிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து உத்தரவு பிறப்பித்த நீதிபதி "நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள சிரியா மற்றும் துருக்கி நாடுகளுக்கு நிவாரணம் வழங்கும் வகையில், பிரதமர் நிவாரண கணக்கிற்கு 25,000 ரூபாயை மனுதாரர் செலுத்திவிட்டு அதற்கான ரசீதை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.
மறு உத்தரவு வரும் வரை சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தில் தினந்தோறும் காலை ஆஜராகி கையெழுத்திட வேண்டும். அதேநேரம் தலைமறைவாகக் கூடாது. சாட்சியங்களை கலைக்கவும் கூடாது என்ற நிபந்தனைகளுடன் ஜாமின் வழங்கப்படுகிறது" என உத்தரவிட்டார்.
இதையும் படிங்க: திருமணமான முன்னாள் காதலியை கடத்திய பாஜக பிரமுகர் - சினிமா பாணியில் சம்பவம்!