மதுரை: ராமநாதபுரத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் தீரன் திருமுருகன் தாக்கல் செய்த மனுவில், “மதுரை ரயில் நிலைய வளாகத்தில் பாண்டிய நாட்டின் சின்னமாக இருந்த மீன் சிலை, மதுரை ரயில் நிலையம் நுழைவாயிலில் வைக்கப்பட்டிருந்தது. ஒரே சிலையில் வைக்கப்பட்டிருந்த மூன்று மீன்களை அகற்றி விட்டனர். அதை மீண்டும் அதே இடத்தில் வைக்க உத்தரவிட வேண்டும்” என தெரிவித்திருந்தார்.
இந்த மனு கடந்த வருடம் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, மீன் சிலை அகற்றப்பட இடத்தில் மீண்டும் வைக்கப்பட்டு விட்டது என ரயில்வே தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால், ரயில்வே நிர்வாகம் நீதிமன்றத்தில் சொன்னதுபோல் நடக்கவில்லை என்றும், மீன் சிலைகள் அதே இடத்தில் இருப்பதாக தவறான தகவல் தெரிவித்ததாகக் கூறி, மனுதாரர் தரப்பில் மீண்டும் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.
ஆனாலும், ரயில்வே நிர்வாகம் குறிப்பிட்ட இடத்தில் மீன் சிலைகள் நிறுவப்படாததால் மனுதாரர் தரப்பில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கில், ரயில் நிலையம் அருகே மாநகராட்சிக்குச் சொந்தமான இடத்தில் அச்சிலையை நிறுவ முடியுமா என்பது குறித்து முடிவெடுக்க வழக்கறிஞர் ஆணையம், சட்டமன்ற உறுப்பினர், நாடாளுமன்ற உறுப்பினர், மாநகராட்சி ஆணையாளர், மாவட்ட ஆட்சியர் கொண்ட தலைமையில் குழு அமைத்து உத்தரவு பிறப்பித்து இருந்தது.
இந்நிலையில் இந்த வழக்கு இன்று நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியன் மற்றும் விஜயகுமார் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசுத் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், “மாநகராட்சி சார்பில் இடம் கண்டறியப்பட்டு உள்ளது. மீன் சிலையை ரயில்வே துறை வேகமாக ஒப்படைத்தால், அது தகுந்த இடத்தில் நிறுவப்படும்” என தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து, மதுரைக் கோட்ட ரயில்வே தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், “மீன்சிலை பத்திரமாக உள்ளது. சிலையை தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கத்திடம் எப்போது வேண்டுமானாலும் ஒப்படைக்கத் தயாராக உள்ளோம்” என தெரிவிக்கப்பட்டது. இதனை பதிவு செய்த நீதிபதிகள், தெற்கு ரயில்வே மதுரைக்கோட்ட நிர்வாகம் ஒரு வாரத்தில் மீன் சிலையை ஒப்படைக்க வேண்டும் என உத்தரவிட்டனர்.
மேலும், மீன் சிலை பொதுமக்கள், போக்குவரத்திற்கு இடையூறு இல்லாத தகுந்த இடத்தில் நிறுவப்பட வேண்டும் எனவும்,
மாநகராட்சி இதற்கான முழுப்பொறுப்பை ஏற்று, விரைவில் மதுரை மக்களின் விருப்பத்திற்கும், உணர்வுக்கும் ஏற்ப மீன் சிலையை நிறுவ உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.
இதையும் படிங்க: “ஆர்எஸ்எஸ் அமைப்பு எந்த சட்டவிதிகளின்படி பதிவு செய்யப்பட்டுள்ளது?” - தமிழ்நாடு அரசு வாதம்