மதுரை: கோயில் ஊழியர்கள், அர்ச்சகர்கள், மணியம் உள்ளிட்டோருக்கு குறைந்தபட்ச ஊதிய சட்டத்தின் கீழ் ஊதியம் வழங்க வேண்டுமென தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுக்கு உயர் நீதிமன்ற மதுரைக் கிளை இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது. திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த பெரிய நம்பி நரசிம்ம கோபாலன் என்பவர் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்தார்.
அந்த மனுவில், ‘தென்காசி மாவட்டம் அம்பாசமுத்திரம் ராஜகோபால சுவாமி குலசேகர ஆழ்வார் கோயிலில் பணியாற்றும் அர்ச்சகர்கள், மணியம், பேஷ்கார், ஓதுவார், தவில் மற்றும் நாதஸ்வர வித்வான் உள்ளிட்டோருக்கு குறைந்தபட்ச ஊதிய சட்டத்தின்படி ஊதியம் வழங்கக் கோரியும், சம வேலைக்கு சம ஊதியம் வழங்குவதற்கு எதிரான அரசாணையை ரத்து செய்தும் உத்தரவிட வேண்டும்’ என தனது மனுவில் குறிப்பிட்டு இருந்தார்.
இந்த மனு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, “கோயில்கள் நமது கலாச்சாரத்தில் ஒரு அங்கம். தமிழ்நாட்டில் அதிக கோயில்கள் உள்ளன. அதில் பல கோயில்கள் பழமையான கட்டடக்கலை மற்றும் கலாச்சார மதிப்பைக் கொண்டிருப்பதால், அவை அப்படியே பாதுகாக்கப்பட்டு பராமரிக்கப்பட வேண்டும். இதை கோயில் ஊழியர்களால் மட்டுமே செய்ய முடியும்.
மனுதாரர் பணிபுரியும் கோயிலுக்கு அறநிலையத் துறை சார்பில் நிர்வாக அலுவலர் நியமிக்கப்பட்டு உள்ளார். இதனால் கோயிலின் முழு பொறுப்பு மாநில அரசை சார்ந்தது. இதனால் கோயில் பணியாளர்களின் கோரிக்கையை அப்படியே விட்டுவிட முடியாது. அரசியலமைப்புச் சட்டப்படி மாநில அரசில் பணியாற்றும் பணியாளர்கள் ஆண்களாகவோ, பெண்களாகவோ இருந்தாலும் சமமான பாதுகாப்பும், வாழ்வாதாரமும் வழங்க வேண்டும்.
ஆகவே, குறைந்தபட்ச ஊதிய சட்டத்தின் கீழ் ஊதியம் அனைவருக்கும் வழங்க வேண்டும்” என உத்தரவு பிறப்பித்து இருந்தார். இதை எதிர்த்து அறநிலையத்துறை தரப்பில் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மேல் முறையீடு செய்யப்பட்டது. இந்த மனு நீதிபதிகள் சுந்தர், பரத சக்கரவர்த்தி ஆகியோர் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.
மேல் முறையீட்டு மனுவில், ‘அறநிலையத்துறை தரப்பில் குறைந்தபட்ச கூலி சட்டம் கோயில்களுக்கு பொருந்தாது. ஒவ்வொரு கோயிலும் ஒவ்வொரு நிறுவனம். அந்தந்த கோயிலின் வருமானத்தைப் பொறுத்தே அங்கு ஊதியம் நிர்ணயம் செய்யப்படும். அனைத்து கோயில் பணியாளர்களுக்கும் ஒரே சம்பளம் வழங்க முடியாது.
சில கோயில்களின் நிதி சிக்கல்களை கோயில் பணியாளர்கள் நல நிதியம் உருவாக்கப்பட்டு உள்ளது. எனவே, தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும்’ என கூறப்பட்டது. இதை அடுத்து நீதிபதி ஜி.ஆர் சுவாமிநாதனின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்த நீதிபதிகள் விசாரணையை ஒத்தி வைத்தனர்.
இதையும் படிங்க: காவிரி ஆற்றில் மூழ்கி 4 பள்ளி மாணவிகள் பலியான வழக்கு - சிபிசிஐடி கண்காணிப்பில் விசாரிக்க உத்தரவு!