மதுரை: தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த 27 வயது இளம்பெண், குமரி மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் மயக்கவியல் துறையில் கல்லூரி விடுதியில் தங்கி படித்து வந்தார். இந்நிலையில் கடந்த அக்டோபர் 6ஆம் தேதி கல்லூரி செல்லாமல் விடுதியிலேயே இறந்து கிடந்ததாக கூறப்படுகிறது.
பின்னர் இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, அந்த அறையை சோதனை செய்தபோது அங்கு ஊசியும், மருந்து பாட்டிலும் இருந்தது தெரிய வந்துள்ளது. பின்னர் சோதித்து பார்த்ததில், அது தசைகளை தளர்வடையச் செய்யும் மருந்து என விசாரணையில் தெரிய வந்துள்ளது.
மேலும், தற்கொலை செய்வதற்கு முன்பாக மருத்துவக் கல்லூரி மாணவி எழுதி வைத்த கடிதத்தில், தனக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த பேராசிரியர், மருத்துவ மேற்படிப்பு மாணவர் ஒருவர் மற்றும் மாணவி ஒருவர் ஆகியோர்தான் மரணத்திற்கு காரணம் என எழுதி வைத்திருந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
இதன் அடிப்படையில் போலீசார் இந்த மூன்று நபர்கள் மீதும் வழக்குப் பதிவு செய்து, பேராசிரியரை கைது செய்தனர். மேலும், மருத்துவ மேற்படிப்பு மாணவருக்கு உயர் நீதிமன்ற மதுரைக்கிளை முன்ஜாமீன் வழங்கிய நிலையில், போலீசார் தனிப்படை அமைத்து குற்றம் சாட்டப்பட்டவர்களைத் தேடி வந்தனர்.
இந்நிலையில், உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் தனக்கு முன்ஜாமீன் கோரி குற்றம் சாட்டப்பட்ட மாணவி மனுத் தாக்கல் செய்திருந்தார். மருத்துவ மேற்படிப்பு மாணவருக்கு வழங்கப்பட்ட முன்ஜாமீனை சுட்டிக்காட்டி, மாணவி தனக்கும் முன்ஜாமீன் வழங்க கோரிக்கை வைத்துள்ளார்.
இந்த மனு நீதிபதி சிவஞானம் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, “வழக்கு ஆரம்ப கட்ட விசாரணையில் உள்ளது. மருத்துவக் கல்லூரி மாணவி தற்கொலைக்கு மாணவி தூண்டுகோலாக இருப்பார் என சந்தேகம் உள்ளது” என வாதிடப்பட்டது. இதனைத் தொடர்ந்து தற்கொலைக்கு தூண்டியதாக மாணவி மீது ஆதாரங்கள் எதுவும் இல்லை. எனவே, மருத்துவ மேற்படிப்பு மாணவிக்கு முன்ஜாமீன் வழங்கலாம் என நீதிபதி உத்தரவிட்டார்.