மதுரை: போதைப்பொருள் கடத்திய வழக்கில் ஜாமீன் வழங்கக் கோரிய மனுதாரரின் வழக்கின் மீது அரசு தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவித்ததை ஏற்று, ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2019ஆம் ஆண்டு 213 கிலோ கஞ்சா கடத்தியதாக குபேந்திரன் மற்றும் அவரது சகோதரர் ரவி உள்பட மேலும் பலர் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டனர். சிறையில் இருக்கும் மனுதாரர் குபேந்திரன், தனக்கு ஜாமீன் வழங்கும்படி சென்னை உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனுவில், தனக்கும் இந்த வழக்கிற்கும் சம்பந்தம் இல்லை. காவல்துறையினர் பெய்யான வழக்கில் கைது செய்துள்ளனர், அதனால் ஜாமீன் வழங்க வேண்டும் என கோரியிருந்தார். இந்த மனு நீதிபதி சிவஞானம் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, அரசுத் தரப்பில், மனுதாரர் வணிகரீ தியில் கஞ்சா கடத்தி விற்பனை செய்துள்ளார். காவல்துறை தகுந்த ஆதாரங்களின் அடிப்படையில், மனுதாரரை கைது செய்துள்ளனர். எனவே அவருக்கு ஜாமீன் வழங்கக் கூடாது என எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதனை பதிவு செய்த நீதிபதி, கஞ்சா, குட்கா உள்ளிட்ட போதைப்பொருள் பயன்பாடு பரவுவது சமூகத்தில் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும். போதைப்பொருள் பயன்பாடு அதிகரிப்பது சமூகத்திற்கு நல்லதல்ல. கொடிய பாதிப்பையே ஏற்படுத்தும் எனக்கூறி மனுதாரருக்கு ஜாமீன் வழங்க மறுத்து, மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.
இதையும் படிங்க: அமைச்சர் எ.வ.வேலுக்கு சொந்தமான இடங்களில் மீண்டும் ஐடி ரெய்டு!