மதுரை: முடக்கத்தான் மணி என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனுவில், “தமிழ்நாட்டில் பொங்கல் பண்டிகையையொட்டி உலகப் புகழ்பெற்ற அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற உள்ளது.
இந்த ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும் இடத்திற்கு அருகே எந்தவித ப்ளக்ஸ் பேனர்களும் வைக்க அனுமதிக்கக் கூடாது, எந்த அரசியல் கட்சியையும், அரசியல் கட்சித் தலைவர்களையும் பிரதிநிதித்துவம் செய்யும் எந்த பொருட்களையும் காட்சிப்படுத்தக் கூடாது, மதுரை மாவட்ட ஆட்சியர் ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்கும் காளைகளை, கால்நடைத்துறையுடன் இணைந்து ஆய்வு செய்து, தகுதி வாய்ந்த காளைகளுக்கு மட்டுமே மருத்துவப் பரிசோதனை செய்து சான்றிதழ் வழங்க வேண்டும்.
மேலும், காளைகள் வெளியேறும் பகுதியில் வலுவான இரட்டை தடுப்புகள் அமைத்து, பார்வையாளர்கள் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். பார்வையாளர்கள் கேலரி போதுமான உயரத்துடன் பாதுகாப்பாக உள்ளதா என்பதை உறுதி செய்த பின், பொதுப்பணித்துறை அனுமதி சான்று கொடுக்க வேண்டும்.
ஜல்லிக்கட்டு போட்டியின்போது காளைகளால் காயம் அடையும் வீரர்கள் மற்றும் மாடு உரிமையாளர்களின் உயிரை காக்கும் வகையில், நிபுணத்துவம் பெற்ற அறுவை சிகிச்சை மருத்துவக் குழு மற்றும் மருத்துவ வசதி கொண்ட கட்டமைப்பை ஏற்படுத்த வேண்டும். ஜல்லிக்கட்டு வீரர்களை காவல்துறையினர் மரியாதையுடன் நடத்த வேண்டும். ஜல்லிக்கட்டு நிதியை பொதுப்படையாக தெரிவிக்கும் வகையில், தனி வங்கி கணக்குகள் பராமரிக்க வேண்டும். இவ்வாறு குழு ஏற்படுத்தி, போட்டிகளை முறைப்படுத்த வேண்டும்” என தனது மனுவில் கூறியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் கிருஷ்ணகுமார், விஜயகுமார் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், “மனுதாரரின் கோரிக்கை ஏற்கனவே நடைமுறையில் உள்ளது. மேலும், மனுதாரர் ஜல்லிக்கட்டு பயிற்சி மையம் என ஒன்று வைத்து செயல்படுத்துகிறார். ஒவ்வொரு ஜல்லிக்கட்டுக்கும், தனக்கு தனியாக காளை அவிழ்த்து விடும் 50 டோக்கன்கள் வழங்க வேண்டும் என வலியுறுத்துகிறார்.
இதை ஏற்க மறுத்ததால், நீதிமன்றத்தின் நேரத்தை வீணடிக்கும் வகையில் இது போன்ற மனுத் தாக்கல் செய்துள்ளார். எனவே, இந்த மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்” என வாதிட்டார். இதனைத் தொடர்ந்து, நீதிபதிகள் இதுபோன்று மனுக்கள் தாக்கல் செய்து நீதிமன்றத்தை தவறாக வழிநடத்தக் கூடாது எனக் கூறி, மனுவை தள்ளுபடி செய்து உத்தரவு பிறப்பித்தனர்.
இதையும் படிங்க: அவனியாபுரம் ஜல்லிக்கட்டு அனைத்து சமூகத்தினரிடமும் பேச்சு வார்த்தை நடத்த - உயர் நீதிமன்றம் உத்தரவு..!