மதுரை: விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் பகுதியைச் சேர்ந்த இளம்பிறையன் என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்த மனுவில், “கடந்த 2018ஆம் ஆண்டில் இரவு நேரத்தில் என் நண்பரை வீட்டில் விட்டுவிட்டு என் வீட்டுக்கு நடந்து சென்றேன். அப்போது ராஜபாளையம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பெத்தி என்ற திருமலைராஜா மற்றும் போலீஸ்காரர் அய்யப்பன் இருவரும் என்னை மறித்து விசாரித்தனர்.
பின்னர் என்னை சாதியைச் சொல்லி திட்டினர். காவல் நிலையத்துக்கு என்னை அழைத்துச் சென்றனர். அவர்களுடன் சேர்ந்து மற்ற போலீசார் அருண்குமார், மூவேந்தன், மார்பிஜான், செல்வகுமார் ஆகிய 6 பேரும் கடுமையாக தாக்கி, என் மீது பொய் வழக்குப் பதிவு செய்தனர்.
இதில் எனது உடலில் காது, மூக்கு, கண் உள்பட பல்வேறு இடங்களில் ரத்தக்கசிவு ஏற்பட்டது. இது தொடர்பாக விசாரிக்காமல், எனக்கு மருத்துவச் சான்றிதழை அரசு மருத்துவமனை மருத்துவர் வழங்கினார். பின்னர், நீதிமன்றக் காவலுக்காக என்னை மாஜிஸ்திரேட்டுவிடம் ஆஜர்படுத்தினர்.
போலீசார் பொய் வழக்குப் பதிவு செய்த விவகாரம் குறித்து நான் அளித்த புகார் மனுவை மாஜிஸ்திரேட்டு முறையாக விசாரிக்காமல் நிராகரித்து விட்டார். எனவே, ராஜபாளையம் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள என் மீதான பொய் வழக்கை ரத்து செய்து, எனது மனுவை விசாரிக்கும்படி உத்தரவிட வேண்டும்” என குறிப்பிட்டிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி தனபால் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் வழக்கறிஞர் கருணாநிதி ஆஜராகி, “மனுதாரரை போலீசார் கடுமையாக தாக்கியுள்ளனர். போலீசார் மீது அவர் கூறிய குற்றச்சாட்டுகள் குறித்து மாஜிஸ்திரேட் பரிசீலிக்காதது ஏற்புடையதல்ல” என வாதிட்டார்.
விசாரணை முடிவில் நீதிபதி, “மனுதாரரின் புகாரையும், அது தொடர்பான ஆதாரம், ஆவணங்களை ராஜபாளையம் மாஜிஸ்திரேட்டு முறையாக விசாரிக்கவில்லை. அதற்கு மாறாக, இந்த விவகாரத்தில் சாட்சிகளின் வாக்குமூலத்தில் முரண்பாடு இருப்பதாக மாஜிஸ்திரேட் தெரிவித்துள்ளார். சாட்சிகளின் உண்மைத்தன்மை குறித்து மாஜிஸ்திரேட் ஆராய வேண்டிய அவசியம் இல்லை.
ஒரு குற்றச்சாட்டு கூறப்படும்போது அதற்கான ஆவணங்கள், ஆதாரங்கள் உள்ளதா, இல்லையா என பரிசீலிப்பது மட்டும்தான் மாஜிஸ்திரேட்டின் பணி. மனுதாரர் விவகாரத்தில் மாஜிஸ்திரேட் எதையும் முழுமையாக விசாரிக்க தவறிவிட்டார். எனவே, மனுதாரர் மீதான வழக்கு குறித்து மீண்டும் ராஜபாளையம் மாஜிஸ்திரேட்டுவிடம் அனுப்பப்படுகிறது. காவல்துறை அதிகாரிகள் மீதான புகாரை முறையாக மீண்டும் விசாரித்து உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும்” என உத்தரவிட்டார்.
இதையும் படிங்க: கிராம சபை கூட்டத்தில் விவசாயியை தாக்கிய ஊராட்சி செயலாளருக்கு முன்ஜாமீன்!