மதுரை: உலகப்புகழ் பெற்ற மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு இன்று காலை 7 மணிக்குத் தொடங்கியது. இந்த போட்டியைப் பத்திரப் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி கொடியசைத்துத் துவங்கி வைத்தார். முன்னதாக மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா தலைமையில் உறுதி மொழி எடுக்கப்பட்டது.
இதில் கலந்து கொள்வதற்காக ஆயிரம் காளைகள் மற்றும் 600 மாடு பிடி வீரர்கள் மற்றும் பதிவு செய்து இருந்தனர். இந்நிலையில் போட்டியில் பங்கேற்க வந்த சிலர் மது அருந்தியது, உடல் தகுதி இல்லாமை, ஆவணத்தில் குளறுபடி உள்ளிட்ட காரணங்களால் 20 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
இதனையடுத்து காலை 7.10 மணியளவில் கோயில் காளை அவிழ்த்து விடப்பட்டு ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது. போட்டியைப் பார்வையிடுவதற்காக மதுரை மட்டும் இன்றி பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான பார்வையாளர்கள் வருகை தந்திருந்தனர். இந்நிலையில் காலை 7 முதல் நடைபெற்று வந்த இந்த போட்டி 10 சுற்றுகளுடன் நிறைவு பெற்றது. மொத்தம் 825 காளைகள் களம் கண்ட நிலையில் 300க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்றனர்.
முதல் பரிசு: இதில் மதுரை அவனியாபுரத்தைச் சேர்ந்த கார்த்திக் 17 காளைகளை அடக்கி முதல் பரிசை வென்றார். இவர் கடந்த ஆண்டு போட்டியில் 17 காளைகளை அடக்கி பைக் பரிசாகப் பெற்ற நிலையில், இந்த ஆண்டும் தற்போது வரை 17 காளைகளை அடக்கி சாதனையைச் சமன் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனையடுத்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சார்பில் கார் ஒன்று பரிசாக வழங்கப்பட்டது.
இந்த போட்டியில் 13 காளைகளை அடக்கிய முரளிதரன் இரண்டாம் இடத்தையும், 9 காளைகள் அடக்கிய முரளிதரன், முத்துகிருஷ்ணன் ஆகியோர் மூன்றாம் இடத்தையும் பிடித்தனர். இதனையடுத்து சிறந்த காளையாக அவனியாபுரத்தைச் சேர்ந்த ஜீ.ஆர்.கார்த்திக் என்பவரின் காளை தேர்வு செய்யப்பட்டது. அவருக்கு உதயநிதி ஸ்டாலின் சார்பாக கார் பரிசாக வழங்கப்பட்டது.
போட்டி நிறுத்தம்: முன்னதாக 7வது சுற்று நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது, காளைக்குக் காலில் அடிப்பட்ட காரணத்தால் 10 நிமிடம் போட்டியானது நிறுத்தம் செய்யப்பட்டது. இதனையடுத்து காளையானது சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் அழைத்துச் செல்லப்பட்டு பின் போட்டி தொடங்கியது.
9 பேர் தீவிர சிகிச்சை: விறுவிறுப்பாக நடைபெற்ற அவனியாபுரம் ஜல்லிக்கட்டில், தலைமைக் காவலர், சார்பு ஆய்வாளர் உட்பட 51 பேர் காயமடைந்துள்ளனர். இதில் 9 பேர் மேல் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மாடுபிடி வீரர்கள் 22 பேர், காளை உரிமையாளர்கள் 25 பேர், பார்வையாளர்கள் இரண்டு பேர், காவலர்கள் இரண்டு பேர் என மொத்தம் 48 பேர் அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் காயமடைந்துள்ளனர்.
இதையும் படிங்க: குடும்பத்தாருடன் பொங்கல் கொண்டாடிய சினிமா பிரபலங்கள்… ரசிகர்களுக்கு வாழ்த்து!