மதுரை: மரபுசாரா எரிசக்தி வளம் குறித்த பார்வை உலகளவில் அதிகரித்து வரும் நிலையில், சுற்றுச்சூழலுக்கு உகந்த வாகனப் பயன்பாட்டின் தேவை குறித்த புரிதலும் உருவாகி வருகிறது. இந்நிலையில், சூரிய ஆற்றல், மின் ஆற்றல் ஆகியவற்றைப் பயன்படுத்தி வாகனங்களை உருவாக்கும் நிறுவனங்களும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளன.
இந்நிலையில், மதுரையின் பாரம்பரிய கல்வி நிறுவனங்களுள் ஒன்றான 'அமெரிக்கன் கல்லூரியில்' பயிலும் இயற்பியல் முதலாமாண்டு பயயிலும் மாணவர் தனுஷ்குமார், 'மேனுவல் ரீசார்ஜபிள் இ-பைக்' ஒன்றை உருவாக்கி அசத்தியுள்ளார். இதே மாணவர் சூரிய ஆற்றலில் இயங்கும் 'சைக்கிள்' ஒன்றை சில மாதங்களுக்கு முன்பாக உருவாக்கி பாராட்டைப் பெற்றவர்.
இது குறித்து மாணவர் தனுஷ்குமார் கூறுகையில், 'முன்னர் நான் உருவாக்கிய சோலார் சைக்கிளைக் காட்டிலும் மூன்று மடங்கு அதிக திறன் கொண்டதாக, இந்த 'இ-பைக்'கைக் கண்டுபிடித்துள்ளேன். இந்த 'பைக்-கில் பெடலிங் முறையையும் இணைத்துள்ளேன். இதன் மூலம் பெடலிங் செய்துகொண்டே 'பைக்'கை ரீசார்ஜ் செய்து கொள்ள முடியும்.
கார்களுக்குப் பயன்படுத்தும் 'ஆல்டனேட்டர்' பயன்படுத்தி, அதனை பெடலிங் செயின் மூலமாகத் தொடர்பு ஏற்படுத்தியுள்ளேன். இதன் மூலம் 'இ-பைக்' தானாகவே சார்ஜாகிவிடும். ஆகையால், நமது பயணத்தில் எந்தவித இடையூறும் ஏற்பட வாய்ப்பில்லை. ஒருமுறை சார்ஜ் செய்தால் சராசரியாக 40 கி.மீ. வேகத்தில் 100 கி.மீ.க்கு மேல் பயணம் செய்ய முடியும்.
பிறகு சார்ஜ் குறைந்தால் 'பெடலிங்' மூலமாக நாம் மேற்கொள்ளும் ஒரு மணி நேரப் பயணத்தில் மீண்டும் பைக், சார்ஜாகிவிடும். இந்த இடத்தில் பேட்டரி ஆற்றல் மட்டுமன்றி, 'ஆல்டனேட்டர்' ஆற்றல் மூலமாகவும் பயணம் மேற்கொள்ள முடியும். சோலார் பேனர் வைப்பதற்கு அதிக இடம் தேவை. ஆனால், இந்த 'இ-பைக்'கில் அப்படி இடமெல்லாம் அவசியமில்லை. இந்த 'இ-பைக்' சுற்றுச்சூழலுக்கு மட்டுமன்றி உடல் நலனுக்கும் உகந்ததாக இருக்கும்' என்றார்.
இதனை கோவையிலுள்ள ஒரு தனியார் நிறுவனத்துடன் இணைந்து பொதுமக்களின் புழக்கத்திற்கு கொண்டு வர முயற்சி மேற்கொண்டு வருகிறார், தனுஷ்குமார். தன்னுடைய தாயாரின் நகைகளை விற்று, இந்த ஆய்வை மேற்கொண்டதாகக் குறிப்பிடும் இவர், தமிழ்நாடு ஊரக தொழில் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், நிதியுதவி செய்ததை மிகப்பெருமையாகக் குறிப்பிடுகிறார்.
தன்னுடைய இந்த முயற்சிக்கு தனது கல்லூரி முதல்வர் தவமணி கிறிஸ்டோபரும், தனது துறைத் தலைவரும் ஊக்குவிப்பதை நன்றியுடன் நினைவுகூர்கிறார், மாணவர் தனுஷ்குமார்.
தனுஷ்குமாரின் ஆசிரியர் முனைவர் மூர்த்தி கூறுகையில், 'மாணவர் தனுஷ்குமாரால் முன்னர் உருவாக்கப்பட்ட சைக்கிள், சார்ஜிங் காரணமாக சற்று சிக்கலில் இருந்தது.
வீட்டில் மட்டுமே சார்ஜ் செய்துவிட்டுப் பயணம் மேற்கொள்ள முடியும். ஆனால் தற்போது உருவாக்கப்பட்ட சைக்கிளானது, நமது பெடலிங் மூலமாகவே சார்ஜ் ஏற்றிக்கொள்ளும் திறன்கொண்டது. இதுதான் இதன் சிறப்பம்சம்' என்கிறார்.
சுற்றுச்சூழல் நோக்கிலும், பொதுமக்களின் உடல்நலன் அடிப்படையிலும் மாணவர் தனுஷ்குமாரின் இப்புதிய உருவாக்கம் பொதுப்பயன்பாட்டில் மக்களை ஈர்க்கக்கூடியதாக அமையும் என்பதில் எந்தவித ஐயமுமில்லை.
இதையும் படிங்க: குரங்குகளின் அட்டகாசம் - சுற்றுலாப் பயணிகள் அவதி!