மதுரை விமான நிலையத்தில் பாஜக மூத்தத் தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான சுப்ரமணியன்சுவாமி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், ' தவறான கொள்கையால் பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்துவிட்டது. மோடிக்கும், நிர்மலா சீதாராமனுக்கும் பொருளாதாரம் குறித்த அறிவு கிடையாது. வெங்காய விலை ஏற்றம் அடையும் என ஏற்கனவே கூறியிருந்தேன். தவறான பொருளாதார கொள்கையால் இந்தியப் பொருளாதாரம் குழப்பமடையும்.
வெங்காய விலைக்குக் காரணம் அதிக அளவிலான ஏற்றுமதி தான். வெங்காய விலை தொடர்பாகவும், பொருளாதார மேம்பாடு குறித்தும் மோடிக்கு கடிதம் அனுப்பியுள்ளேன். ஆனால், அதனை பொருட்படுத்தவில்லை. தமிழ்நாட்டில் புதிய தலைமை சசிகலாதான். குருமூர்த்தி பேச்சைக் கேட்பவர்கள் குட்டி சுவர் ஆவார்கள். ஓபிஎஸ் போல ஈபிஎஸ்சும் குட்டி சுவர் ஆவார். சசிகலா நினைப்பவர்தான் முதலமைச்சராக வருவார் ’ எனக் கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், ’ சினிமா நடிகர்கள் அரசியலுக்கு வருவது மாயை, 40 எம்.பி.க்கள் டெல்லியில் வாய் திறப்பதில்லை, பூனை போல உள்ளனர். தமிழ்நாடு நாடாளுமன்ற உறுப்பினர்களால் தமிழ்நாடு உரிமையை மீட்க முடியவில்லை. இந்தியாவில் பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை என்பது உண்மை. சட்டத்தில் மாற்றம் வேண்டும். பெண்களுக்கு எதிரான தாக்குதல்களால் யுத்தம் நடக்கலாம்.
இனி அடிக்கடி மதுரை வருவேன், பாஜகவின் பாதி பேர் பென்சன் வாங்குவார்கள். சாதிக்க மாட்டார்கள். தமிழ்நாடு பாஜக டெல்லியில் இருந்து வருபவர்களை வரவேற்பதற்காக மட்டுமே உள்ளது. சினிமாக்காரர்களை தமிழ்நாட்டு மக்கள் நம்பக் கூடாது' எனக் கூறினார்.
இதையும் படிங்க:
'நந்தா' பட பாணியில் வெங்காயம் திருடி, பணம் வாங்கிச் சென்ற நபர் கைது!