மதுரை தோப்பூரில் ஆயிரத்து 264 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 224.24 ஏக்கர் பரப்பளவில் எய்ம்ஸ் மருத்துவமனை அமையவுள்ளதாக கடந்த ஆண்டு ஜுன் மாதம் அறிவிக்கப்பட்டது. மருத்துவமனைக்கான நிலங்கள் கையகப்படுத்தப்பட்டு தமிழ்நாடு சுகாதாரத் துறை அலுவலர்கள், மத்தியகுழு, ஜப்பானிய நிதிக்குழுவினர் நிலங்களை ஆய்வு செய்தனர்.
இத்திட்டத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி கடந்த ஜனவரி மாதம் அடிக்கல் நாட்டினார். பின்னர், சுகாதாரத்துறை அலுவலர்கள் எய்ம்ஸ் மருத்துவமனைக்கான இடம் சுகாதாரத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டு விட்டதாகவும், மருத்துவ மனைக்கான சுற்றுச்சுவர் அமைக்கும் பணிகள் விரைவில் தொடங்கும் எனவும் தெரிவித்தனர்.
மொத்தம் 224.24 ஏக்கர் பரப்பளவு கொண்ட திட்டத்தில் 199.24 ஏக்கரில் மருத்துவமனை, 20 ஏக்கரில் இந்தியன் எண்ணெய் நிறுவன குழாய் வழித்தடம், 5 ஏக்கரில் சாலைப் பணிகள் அமைக்கப்படுவதற்கான வரைபடங்கள் தயாரிக்கப்பட்டுள்ளது.
முதற்கட்டமாக மருத்துவமனைக்கு செல்வதற்கான கூத்தியார் குண்டு விளக்கிலிருந்து, கரடிக்கல் வரை மத்திய சாலை நிதித் திட்டத்தின் கீழ் ரூ.21 கோடியே 20 லட்சம் மதிப்பில் 6.4 கி.மீ. நீளத்திற்கு சாலைகள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
எய்ம்ஸ் மருத்துவமனையின் 5.50 கிலோமீட்டர் சுற்றளவிற்கு சுற்றுச்சுவர் அமைக்கும் பணி முடிக்க ரூ.10 கோடி மதிப்பீட்டில், ஈரோட்டை சேர்ந்த பி&சி நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.
கடந்த சனிக்கிழமை மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் எய்ம்ஸ் மருத்துவ குழு, கட்டுமான பணி குழுவினர் 224.24 ஏக்கருடன் கூடுதலாக 24 ஏக்கர் வேண்டுமென கோரிக்கை விடுத்தனர். கோரிக்கையை ஏற்ற வருவாய்த்துறை அலுவலர்கள் விரைவில் கூடுதலாக 24 ஏக்கர் சேர்த்து மொத்தம் 248.24 ஏக்கர் ஒதுக்கப்பட நடவடிக்கை எடுத்து அதற்கான வரைபடம் தயார் செய்து கொடுக்கப்படவுள்ளதாவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
கட்டிடப் பணிகளுக்கு முன் சுற்றுச்சுவர் அமைக்கும் பணி தொடங்கவுள்ளது. இதற்காக ஒப்பந்தம் விடப்பட்டுள்ள பி&சி நிறுவனம், சுற்றுச்சுவர் அமைப்பதற்கான கட்டுமான பணியை இன்று தொடங்கியுள்ளது. 12 அடி நீளம், 10 அடி உயரம் கொண்ட 1500 கான்கிரீட் சிலாப்கள் தயாரிக்கப்பட்டு, சுற்றிலும் பதிக்கப்படுமெனவும் அதற்கான பணிகள் தற்போது தொடங்கியுள்ளது எனவும் ஒப்பந்ததாரர்கள் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: 'எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணி விரைவில்...!'