திருமங்கலத்தை அடுத்த தோப்பூரில் 1264 கோடி ரூபாயில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய உள்ளதாக மத்திய அரசு அறிவித்திருந்தது. இதற்காக பிரதமர் மோடி அடிக்கல் நாட்டிய நிலையில், இன்னும் அதற்கான பணிகள் தொடங்கப்படாததைக் கண்டித்து, திமுகவினர் வித்தியாசமான முறையில் தங்களின் எதிர்ப்பினை தெரிவித்தனர்.
திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் இளமகிலன் தலைமையில், 50க்கும் அதிகமான திமுகவினர், அரசு நுரையீரல் மருத்துவமனை எதிரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய உள்ள இடத்திற்கு வந்தனர்.
அவர்கள் அனைவரும் "மதுரைக்கு எய்ம்ஸ் மருத்துவமனை வருமா? வராதா?" என்ற வாசகம் அச்சிடப்பட்ட டி-ஷர்ட் அணிந்து வந்திருந்தனர். மத்திய மாநில அரசுகள் பணிகளை தொடங்காமல் காலதாமதப்படுத்தி வருவதைக் கண்டித்து மருத்துவமனை அமைய உள்ள இடத்தில், 100 மரக்கன்றுகளை நட்டு தங்களின் எதிர்ப்பினை தெரிவித்தனர்.
பின் செய்தியாளர்களிடம் பேசிய இளமகிலன் கூறுகையில், "எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க அடிக்கல் நாட்டி இரண்டு ஆண்டுகளாகியும் இன்னும் பணிகள் தொடங்கப்படவில்லை. மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமையவில்லை என்றால் தன்னுடைய எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்வேன் என சொன்ன அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் இன்னும் ராஜினாமா செய்யவில்லை. அது பற்றி கேட்டால் பதில் சொல்ல மறுத்துவருகிறார். மதுரையில் இரண்டு அமைச்சர்கள் இருந்தும் இன்னும் பணிகள் தொடங்காதது வருத்தம் அளிக்கிறது" என்றார்.
சில நாட்களுக்கு முன்பு இந்தி திணிப்பு எதிராக "இந்தி தெரியாது போடா" என்ற டி-ஷர்ட் டிரெண்ட் ஆனதைத் தொடர்ந்து, மதுரைக்கு எய்ம்ஸ் வருமா வராத என்ற வாசகத்துடன் திமுகவினர் டி-ஷர்ட் அணிந்து நூதன முறையில் எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றனர்.
இதையும் படிங்க:தேர்தல் முடிந்தாலும், அடுத்தது திமுக ஆட்சிதான் என்று ஸ்டாலின் கூறிக்கொண்டே இருப்பார்- அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன்