தேனியைச் சேர்ந்த சரவணா உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுவினைத் தாக்கல்செய்திருந்தார். அதில், "1958ஆம் ஆண்டு தமிழ்நாடு பூதன் விதிகள் உருவாக்கப்பட்டன. அதன் அடிப்படையில் தேனி வடவீரநாயக்கன்பட்டி பகுதியில் சுமார் 240 சென்ட் நிலம், 120 பேருக்கு வழங்கப்பட்டது. நிலமற்ற ஏழைகளுக்கு மட்டுமே இந்த நிலம் வழங்கப்பட வேண்டும்.
ஆனால் அவ்வாறின்றி பலருக்கும் விதிகளை மீறி இந்த நிலம் வழங்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக நடவடிக்கைக் கோரி மனு அளித்த நிலையில் தேனி மாவட்ட வருவாய் அலுவலர் இது குறித்து விசாரிக்க உத்தரவிடப்பட்டது. 2019இல் விசாரணையை தொடங்கிய நிலையில் தற்போதுவரை எவ்விதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
ஆகவே வடவீரநாயக்கன்பட்டி பகுதியில் பூதன் யோஜனா திட்டத்தின்கீழ் நிலம் வழங்கப்பட்டதில் உள்ள முறைகேடுகள் குறித்த விசாரணையை விரைவாக முடிக்க உத்தரவிட வேண்டும்" எனக் கூறியிருந்தார்.
இந்த வழக்கை நீதிபதிகள் எம்.எம். சுந்தரேஷ் ஆனந்தி அமர்வு விசாரித்தது. தேனி மாவட்ட வருவாய் அலுவலர் எட்டு வாரங்களில், நிலம் வழங்கியதில் நடந்த முறைகேடுகள் குறித்து விசாரித்து அறிக்கை தாக்கல்செய்ய உத்தரவிட்டு வழக்கை முடித்துவைத்தனர்.
இதையும் படிங்க: காட்டுமன்னார்கோவிலில் தேர்தல் நேரத்தில் வந்து இறங்கிய ஹெலிகாப்டரால் பரபரப்பு