மதுரை: புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த தன. விமல் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்துள்ளார். அதில் "புதுக்கோட்டை மாவட்டம் பட்டுக்கோட்டை அறந்தாங்கி இணைப்பு பகுதி சாலை சீரமைக்கும் பணிகளுக்கான ஒப்பந்தத்தை கீரமங்கலம் பேரூராட்சி நிர்வாக அலுவலர் கடந்த மார்ச் 9ஆம் தேதி அறிவித்தார். 67 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 180 நாட்களுக்குள் முடித்துத் தரவேண்டும் என்று அதில் குறிப்பிட்டிருந்தனர்.
அறிவிப்பானையில் வெளியிடப்பட்டுள்ள அனைத்து நிபந்தனைகளையும் ஏற்று தகுதியான ஆவணங்களை சமர்ப்பித்து ஒப்பந்தத்தில் பங்கேற்றேன். இதனை தொடர்ந்து கடந்த மே 29ஆம் தேதி அன்று இணையவழியில் இதற்கான ஏலம் நடத்தப்பட்டு அதேநாளில் இறுதி செய்யப்பட்டது.
பின்னர் ஒப்பந்தத்திற்கான இறுதி முடிவை வெளியிடும் தேதியை ஒத்தி வைத்தனர். பலமுறை ஒப்பந்தத்திற்கான இறுதி முடிவை வெளியிட வேண்டும் என அலுவலர்களிடம் மனு கொடுத்தும் இதுவரை எந்தவிதமான அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. எனவே ஒப்பந்தத்திற்கான இறுதிப் பட்டியலை வெளியிட உத்தரவிட வேண்டும்” என குறிப்பிட்டிருந்தார்.
இந்த வழக்கு நேற்று (ஜூன் 15) நீதிபதி ஜி ஆர் சுவாமிநாதன் முன்பு விசாரணைக்கு வந்தது. இதனை விசாரித்த நீதிபதி, மே 9, 2022 அன்று அறிவிக்கப்பட்ட ஒப்பந்தத்திற்கு இடைக்கால தடை விதித்தும், ஒப்பந்தம் சம்பந்தமான அனைத்து ஆவணங்களையும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டு, விசாரணையை ஜூன் 17ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
இதையும் படிங்க: அதிகாரிகளின் அலட்சியமே தண்ணீர் பஞ்சத்திற்கு காரணம் - உயர் நீதிமன்றம்