தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் பகுதியைச் சேர்ந்த தந்தை ஜெயராஜ், மகன் பெனிக்ஸ் உயிரிழந்த விவகாரத்தில் கைதுசெய்யப்பட்ட தலைமைக் காவலர் தாமஸ் பிரான்சிஸ் மதுரை மத்திய சிறையில் உள்ளார்.
இவர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் பிணை வழங்கக்கோரி மனு தாக்கல்செய்திருந்தார். அதில், "எனது சகோதருக்கு ஜனவரி 11ஆம் தேதி திருமணம் நடைபெற இருப்பதால், அதனைக் கருத்தில்கொண்டு எனக்கு இடைக்காலப் பிணை வழங்க வேண்டும்" எனக் கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதி நிர்மல் குமார் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் தரப்பில், "தூத்துக்குடி அருகேயுள்ள மெய்ஞானபுரத்தில் பிரான்சிஸ் சகோதரருக்கு திருமணம் நடைபெற உள்ளது. எனவே தாமஸ் பிரான்சிஸுக்கு இடைக்காலப் பிணை வழங்க வேண்டும்" என வாதிட்டார்.
இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி, ஜனவரி 10 ஆம் தேதி காலை 11 மணி முதல் 12ஆம் தேதி மாலை 5 மணி வரை இடைக்காலப் பிணை வழங்கி உத்தரவு பிறப்பித்தார்.
இவர்களுக்குச் சம்பந்தப்பட்ட காவல் நிலைய காவலர்கள் போதிய பாதுகாப்பு வழங்க வேண்டும் எனவும் உத்தரவு பிறப்பித்துள்ளார். இதேபோல், காவல் உதவி ஆய்வாளர் ரகு கணேஷ் பிணை கோரிய மனு மீதான தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: சாத்தான்குளம் சம்பவம்: சிகிச்சையில் இருக்கும் காவலர்களிடம் நீதிபதி விசாரணை!