தென்காசி முள்ளிக்குளத்தைச் சேர்ந்த அசோக்குமார், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனுவில், “என் தந்தை வெற்றிவேல் ஆழ்வார்குறிச்சி காவல் நிலையத்தில் சார்பு ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்தார்.
அவர் கடந்த 7.10.2010-ல் அம்பை நீதிமன்றத்துக்கு சென்றுவிட்டு காவல் நிலையம் திரும்பும்போது, அம்பை- ஆழ்வார்குறிச்சி சாலையில், சமூக விரோதிகளால் வெடிக்குண்டு வீசி கொல்லப்பட்டார். அந்த வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது.
தந்தை இறந்ததும் கருணை அடிப்படையில் காவல் கண்காணிப்பாளர் அலுவலக உதவியாளராக என் தாயார் நியமிக்கப்பட்டார். எனக்கு 18 வயதானதும் அந்த கருணை வேலையை வழங்குமாறும் தாயார் கடிதம் வழங்கினார்.
தற்போது நான் அரசுப் பணியில் சேர்வதற்குரிய வயது, கல்வித் தகுதி பெற்றுள்ளேன். எனவே எனது தாயாருக்கு வழங்க வேண்டிய கருணை வேலையை எனக்கு வழங்கக் கோரி 20.8.2018-ல் அரசுக்கு மனு அனுப்பினேன்.
இதுவரை எனக்கு வேலை வழங்கவில்லை. எனவே என் மனுவை பரிசீலித்து எனக்கு கருணை வேலை வழங்க உத்தரவிட வேண்டும்” எனக் கூறியிருந்தார்.
இந்த மனுவை நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி விசாரித்தார். அப்போது, “கருணை வேலை கேட்டு மனுதாரர் அனுப்பியுள்ள மனுவை உள்துறை செயலாளர் நான்கு வாரத்தில் பரிசீலித்து உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும்” என உத்தரவிட்டார்.