கன்னியாகுமரி மாவட்டம் இளஞ்சிறையை சேர்ந்த கிருஷ்ண நாயர் என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில், " பொருளாதாரத்தில் நலிவடைந்த உயர் சாதியினருக்கு வேலைவாய்ப்பு, கல்வி ஆகியவற்றில் 10 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்கி மத்திய அரசு சட்டம் பிறப்பித்துள்ளது.
இந்நிலையில் தமிழ்நாட்டில் மருத்துவ கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ் படிப்பிற்கான சேர்க்கை கலந்தாய்வு, முதற்கட்டமாக ஜூலை 5 முதல் ஜூலை 12ஆம் தேதி வரை நடக்கிறது. நான் நீட் தேர்வில் 320 மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளேன். மேலும் நான் பொதுப்பிரிவில் (OC பிரிவு) வரும் நிலையில் மத்திய அரசு கொண்டு வந்த பொருளாதாரத்தில் மத்திய அரசின் 10% இட ஒதுக்கீடு வழங்கும் சட்டத்தின் அடிப்படையில் தமிழ்நாடு மருத்துவக் கல்லூரிகளில் சேரும் கலந்தாய்விற்காக விண்ணப்பித்து இருந்தேன். ஆனால் எனக்கு இதுவரை எந்தவித தகவலும் வரவில்லை. தமிழ்நாட்டில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் மத்திய அரசின் இட ஒதுக்கீட்டு சட்டம் பின்பற்றவில்லை என தெரியவந்தது.
பிற மாநிலங்களில் இந்திய மருத்துவக் கழகத்தின் அறிவுறுத்தலின்படி இந்த இட ஒதுக்கீட்டு முறை பின்பற்றப்படுகிறது. ஆனால் தமிழ்நாட்டில் இது அமல்படுத்தப்படாததால் எனது மருத்துவ கனவு சிதைந்துவிட்டது. எனவே மத்திய அரசின் 10% இட ஒதுக்கீட்டை அமல்படுத்திய பிறகு, அதனடிப்படையில் மருத்துவ மாணவ சேர்க்கைக்கான கலந்தாய்வு நடத்த உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தார்.
இந்த மனு இன்று நீதிபதி சுரேஷ்குமார் முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத்தரப்பில்," மத்திய அரசின் 10% இடஒதுக்கீடு தொடர்பாக தமிழ்நாடு அரசு இதுவரை எந்த கொள்கை முடிவையும் எடுக்கவில்லை. அது தொடர்பாக ஆலோசனைகள் நடைபெற்று வருகின்றன. ஆகவே, கால அவகாசம் வழங்க வேண்டுமென கோரப்பட்டது. இதையேற்ற நீதிபதி வழக்கை ஜூலை 25ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.