இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்று பரவலைக் கட்டுப்படுத்த மத்திய அரசு நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தியுள்ளது. இதன் காரணமாக நாடே முடங்கிப் போயுள்ள நிலையில், மாதச் சம்பளக்காரர்களைவிட, தினக்குலி அடிப்படையில் வேலை செய்துவந்த அடித்தட்டுத் தொழிலாளர்களும், குறிப்பாக கலைகளை நம்பி வாழும் பாரம்பரிய நாட்டுப்புறக் கலைஞர்களின் வாழ்வும் கடுமையாக பாதிக்கப்பட்டுளன.
சித்திரை மாதங்களில் மதுரையை சுற்றியுள்ள கிரமாப்புறங்களில் கோயில் திருவிழாக்கள் நடைபெறுவது வழக்கம். ஊரடங்கு உத்தரவால் திருவிழாக்கள் அனைத்தும் ரத்தானதால் அதனை நம்பி வாழ்ந்துவந்த நாட்டுப்புறக் கலைஞர்களுக்கு பொருளாதார ரீதியில் பெரிதும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இதனைக் கருத்திற் கொண்டு, பல்வேறு திரைப்படங்களில் தனது நாட்டுப்புறப் பாடல்கள் மூலம், புகழ் வெளிச்சம் பெற்ற மதுரையை சேர்ந்த மதிச்சியம் பாலா, நாட்டுப்புறக் கலைஞர்களுக்காக, அவர்களின் வாழ்வாதாரத்தைக் காப்பாற்ற வலியுறுத்தி பாடல் ஒன்றைப் பாடியுள்ளார்.
அதில், 'தமிழக அரசே உதவி கேக்குறோம்... எங்க வறுமையைத்தான் கொஞ்சம் போக்க பாக்குறோம்' என்று அவர் விடுக்கின்ற கோரிக்கை நெஞ்சை உருக்கும் விதமாக அமைந்துள்ளது.
இதுகுறித்து மதிச்சியம் பாலா கூறுகையில், 'நாட்டுப்புறக் கலைஞர்கள் மட்டுமல்லாமல், அரிதாரம் பூசக்கூடிய அனைத்து வகை கிராமியக் கலைஞர்களும் மிகக் கடுமையாக வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அரசின் உத்தரவை மதித்து தற்போது வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கிற தங்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கருணை காட்ட வேண்டும்' என்று கோரிக்கை வைத்துள்ளார்.
மக்களை மகிழ்விக்கின்ற கலைஞர்கள் ஒருபோதும் வறுமையில் வாடுவது கூடாது. அவர்களது கோரிக்கை எட்ட வேண்டியவர்களை எட்டினால் கலைஞர்களின் வாழ்வாதாரம் பாதுகாக்கப்படும் என்பது ஈடிவி பாரத் செய்தி ஊடகத்தின் நம்பிக்கையாக இருக்கிறது.
இதையும் படிங்க: தொழிலாளர்களுக்குப் பாதப்பூஜைச் செய்த உரிமையாளர்: வீடியோ வைரல்!