மதுரை: திருமங்கலம் அருகே உள்ள கப்பலூர் சுங்கச்சாவடி, அரசு விதிமுறைக்கு அப்பாற்பட்டு கட்டப்பட்டுள்ளதாகவும், எனவே சுங்கச்சாவடியை அகற்ற வேண்டும் எனவும் திருமங்கலம் பகுதி வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் குற்றச்சாட்டுக்களை தொடர்ந்து வைத்து வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று அதிகாலை மூன்று மணியளவில், கப்பலூர் சுங்கச்சாவடியை கடந்து செல்வதற்கு காய்கறிகளை ஏற்றி வந்த லாரி ஒன்று, கட்டணம் வசூல் செய்வதற்கு நிறுத்தப்பட்டிருந்தது. அப்போது ஃபாஸ்ட் டேக் சரியாக செயல்படாததால் ஊழியர் ஒருவர், தான் வைத்திருக்கும் ஸ்கேனிங் கருவி மூலம் லாரியில் ஒட்டப்பட்டிருந்த ஃபாஸ் டேக் கோடு லேபிளை ஸ்கேன் செய்யத் தொடங்கினார்.
அப்போது நின்று கொண்டிருந்த காய்கறி சரக்கு லாரி மீது, பின்னால் வந்த மற்றொரு லாரி மோதியது. இதில் காய்கறி லாரியை ஸ்கேன் செய்து கொண்டிருந்த ஊழியர் தடுப்பைத் தாண்டி தூக்கி வீசப்பட்டார். இதில் சுங்கச்சாவடி ஊழியர், லேசான காயங்களுடன் உயிர் தப்பினார்.
மேலும் இந்த விபத்து குறித்து சுங்கச்சாவடி நிர்வாகம் காவல் நிலையத்தில் புகார் ஏதும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையில், லாரி முன் நின்று கொண்டிருந்த ஊழியர், தூக்கி வீசப்படும் சிசிடிவி காட்சி வெளியாகி வைரலாகி வருகிறது.
இதையும் படிங்க: அரிவாளுடன் நபர் அட்டகாசம்: பெண்கள் அலறி அடித்து ஓட்டம்