மதுரை திருமங்கத்தைச் சேர்ந்த முத்துக்குமார் என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்த மனுவில், ''மதுரை அருகே உள்ள திருமங்கலம் நகராட்சியில் 21 வார்டுகள் உள்ளன. இதில் ஒவ்வொரு வார்டிலும் மறு வரையறை செய்தது சமமாக இல்லாமல், சில வார்டுகளில் அதிகமாகவும், ஒரு சில வார்டுகளில் குறைவாகவும் உள்ளன. இன்னும் சிலவற்றில் சமமாகவும் மாறுபட்டுள்ளது. மேலும் பல வார்டுகளில் இறந்தவர்களின் பெயர்கள் நீக்கப்படாமலும், இரட்டை வாக்குரிமை உள்ளவர்களின் பெயர்கள் நீக்கப்படாமலும் உள்ளனர்.
வாக்காளர்கள் ஒன்றுக்கு மேற்பட்ட வார்டுகளில் இடம்பெற்றுள்ளனர். எனவே குறைகளை நீக்கி புதிய வாக்காளர் திருத்தப் பட்டியல் அடிப்படையில் வார்டு மறுவரையறை செய்து, உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும். அதுவரை திருமங்கலம் நகராட்சிக்கு உள்ளாட்சித் தேர்தல் நடத்த இடைக்காலத் தடைவிதித்து உத்தரவிட வேண்டும்'' என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதிகள் துரைசுவாமி, ரவீந்திரன் ஆகியோர் அடங்கிய அமர்வின் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நகராட்சி சார்பில் ஆஜரான வழக்கறிஞர் கூறுகையில், மக்கள்தொகை அடிப்படையில்தான், வார்டுகள் பிரிக்கப்பட்டுள்ளன எனவும் வாக்காளர் அடிப்படையில் வார்டுகள் பிரிக்கப்படவில்லை என்றும் கூறினார்.
இதைத் தொடர்ந்து நீதிபதிகள் மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
இதையும் படிங்க: இந்தியன் 2 விபத்து: லைகா மேலாளர் ஜாமீன் மனு மார்ச் 2ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு!