மதுரை: மேலூர் அருகே தெற்கு தெரு கிராமத்தில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரி நிர்வாகம் சார்பில், மதுரை மாவட்டத்தில் உள்ள சுற்றுலாத் தலங்களை ஹெலிகாப்டர் மூலம் கண்டு ரசிக்க ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளது. இதற்காக நபர் ஒருவருக்கு 6 ஆயிரம் ரூபாய் வீதம் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள தெற்குதெரு கிராமத்தில் தனியார் (வைகை) பொறியியல் கல்லூரி இயங்கிவருகிறது. இந்தக் கல்லூரியும் கோவையைச் சேர்ந்த தனியார் ஹெலிகாப்டர் நிறுவனமும் இணைந்து மதுரை மாவட்டத்திலுள்ள சுற்றுலாத் தலங்களை அனைத்து பொதுமக்களும் கண்டு ரசிக்கும் வண்ணம் குறைந்த கட்டணத்தில் வான்வழி பயணத்தை இன்றுமுதல் தொடங்கியுள்ளது.
இதற்காக நபர் ஒருவருக்கு 6 ஆயிரம் ரூபாய் வீதம் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த ஹெலிகாப்டரில் ஒரே நேரத்தில் 6 பேர் பயணிக்க முடியும்.
இதுதொடர்பாக கல்லூரி நிர்வாகம் கூறியதாவது, "ஹெலிகாப்டரில், அழகர் கோயில் யானைமலை, ஒத்தக்கடை மதுரை மாரியம்மன் கோயில், கீழக்குயில்குடியிலுள்ள புராதன சின்னங்கள் ஆகியவற்றை சுமார் 15 நிமிட பயணத்தில் கண்டு ரசிக்கும் வண்ணம் இந்தப் பயணம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
டிசம்பர் 29ஆம் தேதி வரை மட்டுமே இந்த வசதி ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளது. பயணிகளின் வருகையை பொறுத்தே இது தொடருமா என்பது குறித்து முடிவு எடுக்கப்படும். விமான நிலைய ஒழுங்குமுறை ஆணையத்தின் அனுமதி பெற்று இந்த வான்வழி பயணம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது" எனத் தெரிவித்துள்ளது.
சூரரைப்போற்று திரைப்பட பாணியில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த ஹெலிகாப்டரில் பயணம்செய்த புதுமண தம்பதிகள், தங்களுக்கு இந்தப் பயணம் புதிய அனுபவமாக இருந்ததாக தெரிவித்தனர்.
இதையும் படிங்க: விவசாயிகளுக்கு ரூ.18 ஆயிரம் கோடி நிதி உதவி!